அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் தொலை தூரங்களில் வசிக்கும் கடைகோடி பகுதியை சேர்ந்த மக்களும் பயனடையும் வகையில் நடமாடும் பொது சேவை மையம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று அந்த மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அந்த மாநிலத்தில் இணையதள சேவை அறவே கிடைக்காத பகுதிகளுக்கு இந்த நடமாடும் பொது சேவை மையங்கள் பெரிதும் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா தலைமையில் இந்த முயற்சி தொடங்கி வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக இந்த சேவையை மக்களுக்கு வழங்க சுமார் 27 வாகனங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் பயனடையும் வகையில் இது தொடங்கப்பட்டுள்ளதாக ஜிஷ்ணு தேவ் வர்மா தெரிவித்துள்ளார். மலை பகுதிகள் அதிகம் நிறைந்த தங்கள் மாநிலத்தில் இந்த வகையிலான சேவை வழங்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசின் சான்றிதழ்கள் அல்லது ஆவணங்களை இதன் மூலம் டிஜிட்டல் முறையில் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மாநிலத்தின் அனைத்து பஞ்சாயத்து பகுதிகளுக்கும் சென்று சேவையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
— MyGov Tripura (@mygovtripura) December 25, 2022