சென்னை: திமுகவை வேரோடும், மண்ணோடும் வீழ்த்திக் காட்டுவோம் என்று இபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.24) மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அந்த உறுதிமொழியில்,”ஏழை எளிய அடித்தட்டு மக்களை காக்கின்ற மகத்தான மக்கள் இயக்கம் அதிமுக. இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை நமக்குத் தந்த எம்.ஜி.ஆரின் புகழை, எந்நாளும் காப்போம் என உளமார உறுதி ஏற்கிறோம்.
குடும்ப அரசியலின் மொத்த வடிவம் திமுக. அந்த திமுகவை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திக் காட்டுவோம்! மக்கள் சக்தியாம், எம்ஜிஆரின் துணை கொண்டு, அவர் வகுத்துத் தந்த பாதையில், வீருநடை போடுவோம், வெற்றிநடை போடுவோம். புதிய வரலாறு படைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்!
அள்ளிக் கொடுத்த நம் தலைவர், வீரம் சொல்லித் தந்த நம் தலைவர், திமுக-வை வீழ்த்துவதில், வெற்றி கண்ட நம் தலைவர், அவர் காட்டிய பாதையில், திமுக-வை வீழ்த்துவோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம். திமுக-வை வீழ்த்த, நேர்மை என்ற வாளெடுத்தார், மக்கள் சக்தி என்ற வேலெடுத்தார், ஜெயலலிதா என்கிற வீரமங்கையை, தமிழக மக்களுக்கு எம்ஜிஆர் தந்திட்டார். எம்ஜிஆர் காட்டிய பாதையில், ஜெயலலிதாவின் வழிநடந்து, நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளிலும், வெற்றி கொள்வோம் என்று உறுதி ஏற்கிறோம்
திமுக அரசே. நீட் தேர்வு விலக்கு எங்கே? கல்விக் கடன் ரத்து எங்கே? டீசல் விலை குறைப்பு எங்கே? கேஸ் சிலிண்டர் மானியம் எங்கே? மகளிருக்கு மாதந்தோறும், ஆயிரம் ரூபாய் எங்கே? பொங்கல் வருது, மக்களுக்கு பொங்கல் தொகுப்புடன், 5,000 எங்கே? செங்கரும்பு எங்கே? மக்கள் கேள்விக்கு பதில் எங்கே? விடமாட்டோம். நீங்கதானே சொன்னீங்க, நீங்கதானே கேட்டீங்க, 5,000 எங்கே? விடமாட்டோம் பதில் தராமல் விடமாட்டோம்.
கொடி பிடிக்கும் தொண்டனையும், கோட்டையிலே அமர வைத்து, அழகு பார்க்கும் கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், குடும்ப அரசியல் நடத்தியே, மகனுக்கு மகுடம் சூட்டி, கொடி பிடிக்கும் தொண்டனை, துச்சமென நினைப்பதுதான், திமுக-வின் வாடிக்கை. மக்களுக்கு எடுத்துச் சொல்லி, ஸ்டாலின் அரசின், பொய் முகத்தை பொய் முகத்தை, வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்!
மக்கள் விரோத, திமுக ஆட்சியை எம்.ஜி.ஆர். வழியிலே, வீட்டுக்கு அனுப்புவோம் வீட்டுக்கு அனுப்புவோம்.ஜெயலலிதாவின் அஞ்சாமை துணை கொண்டு, வீர நடை போடுவோம், வெற்றி நடை போடுவோம். தீயசக்தியால் பாதிக்கப்பட்ட, தமிழகத்தைக் காப்பாற்ற, சூளுரைப்போம் சூளுரைப்போம், எம்.ஜி.ஆரின், நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம்!” இவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.