ஆக்ரா: சீனாவிலிருந்து 2 நாட்களுக்கு முன் இந்தியா திரும்பிய, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 23-ம் தேதி சீனாவிலிருந்து, இந்தியா திரும்பியுள்ளார்.
ஆக்ரா விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு, தனியார் ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
அவரிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள், மரபணுப் பரிசோதனைக்காக லக்னோவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் பரிசோதனை நடத்த சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
ஆக்ரா மாவட்டத்தில் நவம்பர் 25-ம் தேதிக்குப் பிறகு கண்டறியப்படும் முதல் கரோனா பாதிப்பு இதுவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்குமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.