"கோட்சேவின் வாரிசுகளுக்கு நேரு வாரிசுகளின் பேச்சு கசக்கத்தான் செய்யும்”–முதல்வர் ஸ்டாலின்

தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், துணைத் தலைவருமான கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கோபண்ணா எழுதிய மாமனிதர் நேரு என்ற நூலை வெளியிட்டார். முதல்வருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொது பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.
ராகுலின் நடை பயணம் இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
இந்த விழாவில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியபோது, “வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த நூலை தமிழக முதல்வர் வெளியிட்டது மேலும் பெருமை சேர்த்துள்ளது. இந்த நூலில் பல்வேறு வரலாற்று களஞ்சியம் இருக்கிறது. ஜவஹர்லால் நேரு ஒரு குடியரசு வாதி. நேரு முற்போக்கு சிந்தனை வாதி. ஏழை எளியவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த செயலாற்றினார். ஜவஹர்லால் நேரு காந்தியுடன் கருத்து முரண்பாடு கொண்டவர் என்றாலும் அவருடன் இணைந்து செயல்பட்டார்.
image
இஸ்லாமியர்கள் கொண்டாட வேண்டிய ஒரு தலைவர் மகாத்மா காந்தி. இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து செயல்பட பாடுபட்டவர் மகாத்மா காந்தி. நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல் காந்தி இன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற 108 நாட்களாக தனது நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கட்சி தலைவர் பதவிக்கு ஆசைபடாமல் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த நடைபயணம் இன்று வெற்றிகரமாக சென்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகிய 3 தேர்தல்களிலும் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது.
சனாதன சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க மிகவும் நெருக்கடியான காலத்திலும் ராகுல் காந்தி இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். மதசார்பின்மை கோட்பாட்டை பாதுகாக்க, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நடை பயணம் தேவையான ஒன்று இந்த நடைபயணம் இந்திய அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் பயணத்திற்கு வலு சேர்க்க வேண்டிய கடமை கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகளுக்கு உள்ளது” என்றார்.
image
திமுக தலைவராக இருந்த ஸ்டாலின் மக்களின் தலைவராக மாறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, “சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் இந்தியாவை கட்டியமைக்க நேரு ஆற்றிய பணிகள் பெரிது. நேருவின் ஆட்சியில் பல்வேறு சிறப்புகள் இருந்தன. வன்முறை இல்லாமல் சமதர்ம ஆட்சியை நடத்தினார். இந்தியாவில் கொஞ்சம், கொஞ்சமாக பொதுத் துறைகளை கொண்டு வந்தார். இன்றைய நாடு வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் நேரு. நம்முடைய முன்னாள் தலைவர் ப.சிதம்பரம் காலத்தில் இந்தியா 10 சதவீத வளர்ச்சி அடைந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. ரத்தம் சிந்தாமல் ஒரு நிலப்பரப்பை அடைய முடியாது. மதத்திற்கு வலிமை உள்ளது. இந்தியாவோடு காஷ்மீர் ரத்தம் சிந்தாமல் இணைந்தற்கு காரணம் நேரு.

அவதூறுகளைப் பரப்பி போலி வரலாற்றைப் புனைந்து பிற்போக்குத்தனங்களை உயர்த்திப் பிடிக்க அடிப்படைவாதிகள் முயலும் காலத்தில் பண்டித நேருவின் வாழ்வை அனைவரும் அறிந்திட திரு. @AGopanna அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சி அவசியமானது; போற்றத்தக்கது! (2/3) pic.twitter.com/9pSRz831aX
— M.K.Stalin (@mkstalin) December 25, 2022

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வரை ஸ்டாலின் திமுக தலைவர். தேர்தலுக்கு பின்பு அவர் தமிழகத்தின் தலைவர், மக்களின் தலைவர். அவர் எந்த தவறையும் நியாயப்படுத்துவதில்லை. இந்த ஜனநாயகத்தில் தவறு நடக்கும். ஒரு அரசாங்கம் என்பது நாம் வந்த உடன் பரிசுத்தம் ஆகி விடாது. இந்த வருடம் மழை நீர் எங்கும் நிற்கவில்லை. நான் 5 ஆண்டு காலம் உள்ளாட்சியில் இருந்துள்ளேன். ஆனால் உள்ளாட்சியில் வேலை பார்ப்பது எளிதல்ல. அனைத்து இடங்களுக்கும் மழைக் காலங்களில் முதல்வர் நேரடியாக சென்று பார்த்தார். பலவற்றை சரி செய்தார். மோடி அரசாங்கத்தை கொள்கை ரீதியாக எதிர்கொள்வதில் முதன்மையான முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்” என்றார்.
image
நேருவுக்கும், படேலுக்கும் இடையே நெருடல் இருந்தது என்பது பச்சை பொய்
அழகிரியை தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “ஆங்கிலத்தில் இந்த நூல் வெளியான போதே நான் அதை வாங்கி படித்து விட்டேன். மிக எளிய தமிழ் நடையில் இந்த புத்தகத்தை வடிவமைத்துள்ளார்கள். தமிழில் இந்த புத்தகத்தை படிக்கும் போது மனம் குளிர்கிறது. இந்த நூல் வெற்றிக்கரமாக பரவ வேண்டும். நேருவுக்கும், படேலுக்கும் இடையே நெருடல் இருந்தது என்பது பச்சை பொய். மொழி வாரி மாநிலம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நேரு. மொழியை பின்னுக்கு தள்ள முயற்சி நடக்கிறது. இந்த நாட்டில் மொழி, பண்பாடு ஆகியவற்றில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது” என்று பேசினார்.
கோட்சே வாரிசுகளுக்கு நேரு வாரிசுகளின் பேச்சு எரிச்சலை உண்டாக்கும்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “இந்த நூலை வெளியிட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இது நூல் அல்ல. வரலாற்று கருவூலம். இது நேரு வரலாறு மட்டுமல்ல. இது இந்தியாவின் வரலாறாக அமைந்துள்ளது. கடந்த கால இந்தியா வரலாறு மட்டுமல்ல. எதிர்கால இந்தியா எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான நூல். கோபண்ணாவுக்கு எனது பாராட்டுக்கள். கூட்டணியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவர் என் மீதும், தலைவர் கலைஞர் மீது நட்பு கொண்டவர். திராவிட கொள்கை மீது பற்று கொண்டவர் கோபண்ணா. கூட்டணிக்குள் நட்பு பாராட்டத்தக்கவர். அந்த வகையில் தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதை படிப்பதை விட பார்த்தாலே போதும் என ப.சிதம்பரம் சொன்னார்கள். அது சரி. நேரு குறித்த அனைத்து தகவல்களையும் திரட்டி ஆங்கிலத்தில் வெளியாகி இன்று தமிழில் வெளியாகி உள்ளது. இந்த புத்தகத்தில் நேருவின் உழைப்பு தெரிகிறது.
image
இந்தியாவின் குரலை எதிரொலித்தவர் நேரு. ஒற்றை மொழி, ஒரே கலாச்சாரத்துக்கு எதிராக இருந்தவர் நேரு. வகுப்புவாதம், தேசியவாதம் சேர்ந்திருக்க முடியாது என சொன்னவர் நேரு. திராவிட இயக்கத்தின் முதலாவது கொள்கை சமூக நீதி. ராகுல் காந்தியின் பேச்சும், இன்று இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
image
அவர் தேர்தல் அரசியலில், கட்சி அரசியலை பேசவில்லை… கொள்கை அரசியலையே பேசினார். அதனால்தான் பலராலும் அவர் எதிர்க்கவும்பட்டார். உண்மையில் ராகுல் காந்தி பேசுவதை கேட்கையில், சில நேரங்களில் ஜவஹர்லால் நேருவே பேசுவது போல உள்ளது. வீரனின் வாரிசு, அப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்! கோட்சேவின் வாரிசுகளுக்கு நேரு வாரிசுகளின் பேச்சு கசக்கத்தான் செய்யும்.

நேருவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரது வீடுகளிலும் இந்த நூல் இருக்க வேண்டும். காமராஜர் குறித்த கோபண்ணா எழுதிய புத்தகத்தை தலைவர் கருணாநிதி வெளியிட்டார். இந்தியா தனது அடையாளமாக கொள்ள வேண்டியது நேருவை தான். நேரு தூய்மையானவர். அச்சம் இல்லாத மாமனிதர். துணிவில் நேருவை மிஞ்ச ஆள் இல்லை. தமிழகத்தின் மீது இந்தி திணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.