18 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூரம்.. சுனாமி நினைவு தினம் இன்று!

இயற்கையின் கோபப் பார்வை ஒரு நொடி வெளிப்பட்டாலும் அதன் பாதிப்பு அளவிடமுடியாதபடி உள்ளது. ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை தலைகீழாக புரட்டிப் போடப்பட்ட குரூர சம்பவம் நிகழ்ந்து இன்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

2004 ஆம் ஆண்டு இதே நாள் டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை. கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த மறுநாள். மக்கள் கடற்கரையோரம் காற்று வாங்கிக் கொண்டும், நடைபயிற்சி மேற்கொண்டும், மீனவ மக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொண்டபடியும் இருந்தனர். ஒரு விடியலை மிகுந்த எதிர்பார்ப்போடு தொடங்க இருந்த மக்களுக்கு தலைமேல் இடி தண்ணீர் வழியில் வந்து விழுந்தது.

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி என்னும் ஆழிப்பேரலை உருவானது. சுமார் 30 மீட்டர் உயரத்துக்கு கடலில் எழுந்து 14 நாடுகளில் கடலோரப் பகுதிகளை மிக மோசமாக தாக்கியது.

இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மலேசியா உள்பட 14 நாடுகளில் கரையோரம் இருந்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்தனர். 43 ஆயிரத்து 786 பேரை காணவில்லை.

தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.

அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் உயிரிழ்ந்தனர். உயிர்ப்பலியை போல வீடுகளும் பல்வேறு கட்டிடங்களும் தேவாலயங்களும் சேதமடைந்தன. பல ஆயிரம் கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும், பொது மக்களும், தொண்டு நிறுவனங்களும் உடனடியாக உதவ களத்தில் இறங்கின. நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி சுனாமியில் உயிரிழந்த மக்களின் நினைவு கூறும் விதமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள், கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், மீனவ அமைப்பினரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

சுனாமியில் உறவுகளை, உடைமைகளை இழந்ததால் மனதில் ஏற்பட்ட காயத்தை காலம் தான் மெல்ல ஆற்ற வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.