தஞ்சை: சோழர்கால கோவிலில் இருந்து 300 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலையை திருடிய இருவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டதாக கூறப்படும் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி அன்று 300 ஆண்டு பழமையான ஆஞ்சநேயர் சிலை திருட்டு போனது. இது தொடர்பாக திருட்டு வழக்கு உள்ளூர் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் குற்றவாளியோ, சிலையோ கண்டு பிடிக்கவில்லை.
இதையடுத்து இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டிஎஸ்பி தண்டாயுதபாணி வழக்கின் குற்றவாளிகளை தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை மேற்கொண்டது. கோயிலில் சிசிடிவி காட்சியை 2019-லிருந்து ஆய்வு செய்ய தொடங்கியது. இதையடுத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் தும்பிக்குளத்தை சேர்ந்த நீலகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் குற்றம் செய்தது தாம் என்பதையும் ஒப்பு கொண்டார். இவருடன் கூட்டாளியான மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.