திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே குப்புசாமி நாயுடுபுரம் அரிவரதன் நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் மகன் கவுதம். இவர் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் விளையாட்டு மைதானத்திற்கு சென்று விட்டு வருவதாக, பெற்றோரிடம் கூறி விட்டு சைக்கிளில் சென்றுள்ளார். அதன்பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் கவுதமை பல்வேறு இடங்களில் தேடினர்.
இதற்கிடையே சுக்கம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழி தண்ணீரில் சைக்கிளில் சென்ற சிறுவன் தவறி விழுந்ததாக, அங்குள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாறைக்குழியில் இருந்து சைக்கிள் மட்டும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் மழை பெய்ததாலும், இரவு நேரமானதாலும், தேவையான வெளிச்சம் இல்லாததாலும் சிறுவனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் மீட்பு பணி நடைபெற்றது.
பலமணி நேரத்திற்கு பின்னர் சிறுவன் கவுதமின் உடல் கிடைத்தது. பின்னர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கவுதம் எப்படி பாறைக்குழியில் விழுந்தான் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.