2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிபேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். லான்ச் படகு மூலம் நடுக் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர்களை தூவியும் மறைந்தவர்களுக்கு மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை என கடுமையாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ” மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்பும் கூட மீனவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. 10-க்கும் மேற்பட்ட கேள்விகளை மீனவர்களிடம் கேட்டு அலைக்கழிப்பு செய்கின்றனர். புயல் கரையை கடந்த மகாபலிபுரத்தை முதலமைச்சர் ஆய்வு செய்யவில்லை. மீனவர்கள் அதிமுகவுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் என தெரிந்து இவர்களை வஞ்சிக்கிறது இந்த விடியா அரசு.
திமுக-வின் சார்பில் இன்று காசிமேட்டில் சுனாமி தின அஞ்சலிக்கு 50 பேர் திருடர்கள் போல தான் வந்தார்கள். மீன்வளத்துறை அமைச்சருக்கு இந்த துறையை பற்றிய ஒன்றும் தெரியாது. அவர் ஒரு வியாபாரி. பண கணக்கு பார்க்கின்ற வியாபாரி, மக்களின் மனகணக்கை பார்த்து செயல்படுவதாக தெரியவில்லை. திமுக அரசின் எந்த துறைகளிலும் மக்கள் நலப் பணிகள் எதுவுமே நடைபெறவில்லை.
ஓபிஎஸ் ஒரு டம்மி . அவர் ஒரிஜினல் கிடையாது. பண்ருட்டி ராமச்சந்திரன் மீது நிறைய மரியாதை உள்ளது. அதனால் அவரை கடுமையாக நான் விமர்சனம் செய்யவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரனை திமுக வின் பி டீமாக பார்க்கிறேன். அதிமுகவை இணைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக சசிகலா கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யின் ஒரு உருவமாய் இருப்பவர் தான் சசிகலா.
பொங்கல் தொகுப்பில் செங்கரும்பை கொள்முதல் செய்யாதது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொங்கல் தொகுப்பில் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். இப்பொழுது ஆட்சியில் இருக்கும்போது ஆயிரம் ரூபாய் தான் கொடுக்கிறார். நிர்வாக திறமை இல்லாத அரசு என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை எ.வ வேலு பேட்டி அமைந்திருக்கிறது” என கூறினார்.