சபரிமலை :சபரிமலையில் நேற்று மாலை மூலவருக்கு தங்கஅங்கி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. இன்று மதியும் 12:30 மணிக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது.
சபரிமலையில் நவ., 17ல் தொடங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகளின் நிறைவாக நடைபெறுவது மண்டலபூஜை. இன்று மண்டல பூஜை நடக்கிறது. இன்று மூலவருக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்கஅங்கி டிச.,23ல் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. நேற்று மதியம் இது பம்பை வந்தடைந்தது. கணபதி கோயில் அருகே தரிசனத்துக்கு வைக்கப்பட்டு மாலை 3:00 மணிக்கு சன்னிதானத்துக்கு புறப்பட்டது.
மாலை 5:30 மணிக்கு சரங்குத்தியில் தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். மாலை 6:25 மணிக்கு 18 படிகள் வழியாக சன்னதி முன்பு வந்த அங்கியை தந்திரி கண்டரரு ராஜீவரரு பெற்றார். பின் மூலவருக்கு அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.
இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்த பின்னர் 4:30 மணிக்கு தொடங்கும் நெய் அபிேஷகம் 11:00 மணிக்கு நிறைவடையும். அதன் பின் கோயில் சுற்றுப்புறம் சுத்தம் செய்யப்பட்டு ஐயப்பனுக்கு சந்தன அபிேஷகம் செய்யப்படும். மதியம் 12:30 மணிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலையில் தீபாராதனை, புஷ்பாபிேஷகம், இரவு 9:00 மணிக்கு அத்தாழபூஜை முடிந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
திண்டுக்கல் பக்தருக்கு தங்க அங்கி சுமக்கும் வாய்ப்பு
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்த பக்தர் ராமையா 55, சேவையை பாராட்டி, பம்பையிலிருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி உள்ள பெட்டியை சுமக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ராமையா. 25 ஆண்டுகளாக சபரிமலைக்கு பாதயாத்திரையாக சென்று அவசரகால உதவி பிரிவில் சேவை செய்து வருகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்களை அவரவர் இடத்திற்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். அவரது சேவையை பாராட்டி சபரிமலை சன்னிதானத்தை சேர்ந்த குழுவினர் பம்பையிலிருந்து ஐயப்பன் கோயிலுக்கு சுவாமிக்கு அணிவிக்கும் தங்க அங்கி உள்ள பெட்டியை சுமக்கும் வாய்ப்பை வழங்கினர்.ராமையா கூறுகையில், ”தங்க அங்கியை 5வது ஆண்டாக கொண்டு செல்கிறேன். ஒவ்வொரு பக்தரும் பிரதிபலன் பார்க்காமல் சேவையாற்றினால் அவர்களுக்கும் இப்பேறு கிடைக்கும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement