பொங்கல் பரிசு: இன்று முதல் பணிகள் தொடக்கம்! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க அமைச்சர்கள் மாவட்டங்களில் தொடங்கி வைக்க உள்ளனர்.

தமிழக அரசு இந்த ஆண்டின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டது.

ரொக்கப் பணத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் இணைக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்தும் எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் அரசிடமிருந்து எந்த மாற்று அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஜனவரி 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள நிலையில் இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி நடைபெறுகின்றன.

பரிசு தொகுப்பு தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டு பயனாளர்களுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.

மேலும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த நாளில், இந்த குடும்பத்துக்கு பொங்கல் பரிசு மற்றும் பொருட்கள் வழங்கப்படும் என்ற விவரங்கள் விபர பலகை மூலமாக தெரியப்படுத்தப்படும்

பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்காக பயனாளர்கள் ஒரே நேரத்தில் கூடி, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது.

விடுமுறைக்காக வெளியூர் சென்றவர்கள் டோக்கன் பெற முடியாத சூழல் ஏற்பட்டாலும் பொங்கல் பரிசு வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது. போகிப் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து பயனாளர்களுக்கும் பரிசுத் தொகுப்பை வழங்க அறிவுறுத்தப்படுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.