சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார் : பிரேத பரிசோதனை செய்தவர் 'பகீர்' வாக்குமூலம்

மும்பை : 'பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டார்' என பிரேத பரிசோதனை குழுவில் இடம்பெற்ற பணியாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட, எம்.எஸ்.தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தில், தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத், 34. பல்வேறு பாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற இவர், 2020, ஜூன் 14ல், மும்பையின் பாந்த்ராவில் உள்ள தன் அடுக்குமாடி குடியிருப்பில் துாக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனையில், இது தற்கொலை என கூறப்பட்டாலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் தந்தை தெரிவித்தார். இது தொடர்பாக மும்பை போலீசார், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போதை பொருள் தடுப்பு பிரிவு உட்பட பல்வேறு துறையினர் விசாரணை நடத்தினர். இறுதியில் சுஷாந்தின் மரணம் தற்கொலை தான் என, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங், 'டிவி' பேட்டி ஒன்றில் பேசுகையில், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தன் மகனின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சுஷாந்தின் உடலை பிரேத பரிசோதனை செய்த குழுவில் இடம் பெற்ற பணியாளர், 'அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டார்' என தெரிவித்து இருப்பது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து, பிரேத பரிசோதனை குழுவில் இடம் பெற்றிருந்த ரூப்குமார் ஷா கூறியதாவது: சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த அன்று, மும்பையின் கூப்பர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஐந்து உடல்கள் காத்திருப்பதாக சொன்னார்கள். அவற்றில் ஒன்று, வி.ஐ.பி., உடல் என்றும் கூறப்பட்டது. உடலை பார்த்ததும், அது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பது தெரிய வந்தது. அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்தன. கழுத்துப் பகுதியில் மூன்று காயங்கள் தென்பட்டன.

வழக்கமாக பிரேத பரிசோதனையை, 'வீடியோ'வில் பதிவு செய்வது வழக்கம். ஆனால், 'சுஷாந்தின் உடலை புகைப்படம் எடுத்தால் மட்டும் போதும்' என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். உடலை ஆய்வு செய்த போது, 'இது நிச்சயம் தற்கொலை இல்லை; கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, சட்ட விதிகளை பின்பற்றி பணியை செய்வோம்' என, குழுவினரிடம் தெரிவித்தேன். ஆனால், பிரேத பரிசோதனையை விரைவாக முடித்து, உடலை போலீசிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். எனவே அவர்கள் உத்தரவுபடி செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.