பெங்களூரு: கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர், பெலகாவியில் நேற்று கூறியதாவது: மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை. அதேவேளையில் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப் பது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை மக்கள் தாமாக முன்வந்து பின்பற்ற வேண்டும்.
பள்ளி, கல்லூரி, திரையரங்கு, உணவகம், மதுபான விடுதி, கேளிக்கை விடுதி, உள் அரங்குகள் உட்பட அனைத்து பொது இடங்களிலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 2 தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே திரையரங்கு,உணவகம், கேளிக்கை விடுதிகளில் அனுமதிக்க வேண்டும்.
உரிய நடவடிக்கை: வரும் 31-ம் தேதி நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படுகிறது. கேளிக்கை விடுதிகள், மதுபான விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் நபர்களை அனுமதிக்கக் கூடாது. இந்த விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கர்நாடகா அமைச்சர் சுதாகர் கூறினார்.