சட்டப்பேரவையில் உதயநிதிக்கு எந்த இடத்தில் இருக்கை? வெளியான தகவல்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. அவர் ஆட்சியமைத்து ஓராண்டை கடந்த பின்னர், கடந்த மார்ச் மாதம் ராஜகண்ணப்பன், சிவசங்கர் ஆகிய 2 அமைச்சர்களின் துறைகள் மட்டுமே மாற்றப்பட்டது. அதுவும், ராஜகண்ணப்பன் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியதாலேயே அந்த மாற்றம் செய்யப்பட்டது.

அதன் பிறகு, தற்போதுதான் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். ஸ்டாலின் ஆட்சியமைத்தே போதே, உதயநிதியின் பெயர் அமைச்சர்கள் லிஸ்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

இதனிடையே, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என மூத்த அமைச்சர்கள் தொடங்கி திமுகவினர் பலரும் வலியுறுத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். அதன்படி, சென்னை ராஜ்பவனில்

அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

திமுக அமைச்சரவையின் 35ஆவது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுதவிர, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்புத்திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறைகளும் உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், திமுக அமைச்சரவை சீனியாரிட்டி பட்டியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவையில் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த இடத்தில் அமர்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு அவை கூட இருப்பதாகவும் அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி எத்தனை நாள் கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

இந்த கூட்டத்தொடர் குறித்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “புதிய அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருக்கு நடுவில் உள்ள இருக்கையில் அமர்வார்.” என தெரிவித்தார்

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது அவர்களுக்கு குறிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரு தரப்பில் இருந்தும் எவ்வித தகவலும் வரவில்லை அதனால் அதே நிலை தொடரும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்வார்.” என்றார்.

மேலும், கொரோனா தொற்று பரவல் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ள படி அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு தரப்பில் விசாரணை ஆணையம் அறிக்கைகளை பேரவை நிறைவேற்றி தருமாறு கூறினால் அந்த ஆணைய அறிக்கைகளை சட்டப்பேரவைகளில் வைத்து நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் இது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.