பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். குறிப்பாக கோவையில் இருந்து அதனை தொடங்குகிறார். இந்நிலையில் டெல்லியில் வானிலை மோசமாக இருந்ததால் அங்கிருந்து கிளம்புவதற்கு தாமதமாகி நட்டா கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வரவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நட்டாவை வரவேற்பதற்காக கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக பாஜகவினர் பல்வேறு ஏற்பாடுகளை இன்று செய்துள்ளனர். மேளதாளங்கள் முழங்க, ஆரத்தி எடுத்தும் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவி வானதி, எம்எல்ஏ நயினார் மகேந்திரன் ஆகியோர் கோவை ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.
பாஜகவின் முன்னணி தலைவர்கள் வருகையை ஒட்டி கோட்டை ஈஸ்வரன் கோயில் சுற்றுவட்டார பகுதி முழுவதும், முழு காவல்துறை பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர் உள்ளிட்டவை கொண்டு பகுதி முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனிடையே கோயிலில் தரிசனம் முடித்த பாஜக நிர்வாகிகள் கோயிலின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :
“டெல்லி விமான நிலையத்தில் மோசமான காலநிலை காரணமாக ஜே.பி.நட்டா வரும் விமானம் தாமதமாகியுள்ளது. அதனால் இப்போதைக்கு அவர் சார்பாக நாங்கள் வந்துள்ளோம். விரைவில் அவர் வருவார். ஆகம விதிப்படி கோயில் 11.30 மணியை ஒட்டி நடை சாத்த வேண்டும் என்பதால் நாங்கள் வந்துள்ளோம்.
அதிமுக பொறுத்த வரை அவர்கள் ஏற்கனவே தேதியை அறிவித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகின்றனர். பா.ஜ.கவை பொறுத்த வரை தேசிய தலைவர் இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்காக சுற்றுபயணத்தை நடத்துகின்றார். இதில் தமிழகத்தில கோவையில் இருந்து இதை துவங்க வேண்டும் என்பது 3 நாட்களுக்கு முன்புதான் திட்டமிடப்பட்டது. இதனால்தான் அதிமுக கூட்டம் நடைபெறுமன்றே இங்கும் நடைபெறுகிறது.
இதை முடித்து விட்டு அவர் ஓரிசாவில் புவனேஸ்வர் செல்கின்றார். தேசிய தலைவர் பயணத்தை தமிழகத்தில் இருந்து துவங்க வேண்டும் என்பதற்காக இங்கிருந்து பயணத்தை துவங்கி இருக்கின்றார். கோவையில் திறமையாக செயல்படும் எம்.ஏல்.ஏ இருக்கின்றார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த பகுதி மக்கள், பா.ஜ.கவை சார்ந்து இருக்கும் மக்கள். தேசியம் அதிகம் இருக்கும் பகுதி. அதனால் தேசிய தலைவரின் இந்த பயணம் மிகுந்த எழுற்சியாக இருக்கும்” என அண்ணாமலை பேட்டி.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM