திருவனந்தபுரம்: சபரிமலையில் 41 நாட்கள் நீண்ட மண்டல காலம் பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் இன்று நிறைவடைகிறது. இதையொட்டி மதியம் சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (17ம் தேதி) முதல் பூஜைகள் தொடங்கியது. கடந்த இரு வருடங்களாக அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் இவ்வருடம் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது.
கடந்த மாதம் சராசரியாக தினமும் 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இம்மாதம் மேலும் அதிகரித்து தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை பக்தர்கள் வந்தனர். இந்தநிலையில் மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி ஊர்வலம் கடந்த 23ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டது, நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடைந்தது. தொடர்ந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தநிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை இன்று (27ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி மதியம் 12.30 மணிக்கும், ஒரு மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் சுவாமிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ெதாடர்ந்து இரவு கோயில் நடை சாத்தப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் மாதம் 30ம் ேததி மாலை கோயில் நடை திறக்கப்படும். 28, 29 தேதிகளில் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
223 கோடி வருமானம்
ெகாரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலையில் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் கோயில் வருமானமும் குறைந்தது. இந்த மண்டல சீசனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதால் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். சில நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் இந்த ஆண்டு கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது.
நேற்று வரை கடந்த 40 நாட்களில் மொத்த வருமானம் ரூ.223 கோடியை தாண்டியுள்ளது. காணிக்கை இனத்தில் மட்டும் வருமானம் ரூ.70 கோடிக்கு அதிகமாக கிடைத்துள்ளது. அதுபோல் கடந்த 40 நாட்களில் இதுவரை 29 லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.