சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று இபிஎஸ் அறிவுறுத்தல் வழங்கியதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில், அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் பணிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆலோசனைகளை விரிவாக எடுத்துக் கூறினார்” என்று கூறப்பட்டுள்ளது.