நடிகை துனிஷாவை பிரிந்தது ஏன்? – கைதான காதலன் வாக்குமூலம்!

மும்பை : 'புதுடில்லியைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண் காதலனால் படுகொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் என்னை பாதித்ததால், காதலை கைவிட முடிவெடுத்தேன்' என, தற்கொலை செய்த நடிகை துனிஷா சர்மாவின் காதலன் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

ஹிந்தி, 'டிவி' தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை துனிஷா சர்மா, 20. இவர் தன்னுடன் நடித்து வந்த ஷீசான் கான், 28, என்பவரை காதலித்தார். கடந்த 24ம் தேதி, மும்பையின் வாலிவ் என்ற இடத்தில் நடந்த படப்பிடிப்பு இடைவேளையின் போது, துனிஷா 'மேக்கப்' அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரை காதலித்து வந்த நடிகர் ஷீசான் கான், திருமணம் செய்து கொள்ள மறுத்ததை அடுத்து துனிஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் வனிதா போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து ஷீசான் கான் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

முதல் நாள் போலீஸ் விசாரணையின் போது நடிகர் ஷீசான் கான் கூறியதாவது: புதுடில்லியைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம் பெண்ணை, அவரது காதலன் அப்தாப் பூனாவாலா கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசி எறிந்தார். இதை, 'லவ் ஜிகாத்' என, பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சனம் செய்தனர். இந்த சம்பவம் என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. எனவே, துனிஷாவிடம் இருந்த விலகி இருக்க முடிவு செய்து, இதை அவரிடம் தெரிவித்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பே துனிஷா தற்கொலைக்கு முயன்றார். நான் தான் அவரை காப்பாற்றினேன். அவரை கண்காணிக்கும்படி அவரது தாயிடம் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.