வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
வாசிப்பு…., உலகின் தலை சிறந்த போதைகளில் ஒன்று. பழகிவிட்டால் மட்டையாகும் வரை, பழக்கத்தை விட முடியாது. இயற்கைக்கு மாறாய், உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்யத்தை தரும் இந்த போதையின் முக்கிய சப்ளையர்கள் வாண்டுமாமா, கல்கி,ராஜேஷ்குமார், சுபா, பி.கே.பி என ஆரம்பித்து சுஜாதா எனும் பேப்லோ எஸ்கோபரின் ராஜ போதையில் பல வருடம் திளைத்து..
பாலகுமாரன் ஐயாவிடம் பக்குவப்பட்டு.. இப்போது எஸ்.ரா, நாஞ்சில் நாடன், ஜெமோ என தேடி தேடி உட்கொள்ளும் போதை. ஒவ்வொருவரின் மூலப்பொருள்களும் வெவ்வேறு விகிதங்களில் .. வேகத்தில் பயணித்தாலும் போய் சேரும் இடம் என்னவோ சொர்க்கம்தான். இதில் எதிர்பாரா ஆச்சரியமாய் ஷார்ட் கட்டில் சொர்க்கத்தை காட்டிய ஒரு அதிரடி வெப்பன் சப்ளையர்தான் சு. வெங்கடேசன் அவர்கள்.

“காவல் கோட்டம்” தான் இவருடைய எழுத்தில் முதலில் வாசித்த நாவல். சாகித்ய அகடாமி விருது பெற்றிருந்தாலும் மதுரையின் தொன்ம வரலாற்றை கிலோபைட்ஸ் வேகத்தில் சொன்னதாலோ என்னவோ பெரிதாய் மனசுக்குள் டவுன்லோட் ஆகவில்லை. ஆனால் வேள்பாரி?
ஆரம்பத்தில் விகடனில் வந்தபோது, கடவுளின் மீதான கவியரசரின் பார்வை போல பெரிதாய் அதன் மீது ஈர்ப்பு இல்லை. நண்பர் சுரேஷ் கண்ணன் அவர்களின் பதிவில் இதன் பெருமையே மெல்ல உணர்ந்த பின், ஒரு எருமைமாட்டை போல் பொறுமையாய் மேய ஆரம்பித்தேன். கொஞ்சம் புற்கள் தான்… மன்னிக்க கொஞ்சம் பக்கங்கள்தான்… அதே எருமை மாட்டின் வாலில் தீ பற்றியது போல அதன் கதை மாந்தர்களோடு திப்புடு திப்புடு என ஓட ஆரம்பித்தேன்… கொஞ்சம் கொஞ்சமாய் உசைன் போல்ட்டின் ரெக்கார்டுகள் பொடி படும்படி பக்கங்கள் வேகமான சக்கரங்களாய் சுழல… ஒரு ஜிலீர் தருணத்தில் இறகு முளைத்து பறம்பு நாட்டின் காக்கா விரிச்சியோடு எல்லையற்ற வானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டேன்.

இறுதியில் அதே கவியரசர், கடவுளிடம் சரணடைந்ததை போல மொத்தமாய் நானும் பாரியின் பாதங்களில் சரணாகதி ஆகி விட்டேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே வாசித்தது.. அப்போதே வேள்பாரியே பற்றி எழுத வேண்டியது….
ஆனால் உருகி உருகி காதலித்து….. உன்னதமான அந்த காதலை வெளிப்படுத்த தகுதியான சொற்கள் கிடைக்காமல் … மனசுக்குள்ளேயே காதலை பூட்டி வைத்த இதயம் முரளி போல இத்தனை நாள் திரிந்திருக்கிறேன். அடக்கி வைத்த ஆசைகள் யாவும் என்றேனும் ஒருநாள் ரபேல் வாட்ச் விவகாரம் போல வெளியே வந்துதானே ஆகவேண்டும்.

வரலாற்று காவியங்களில், சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன்.. பார்த்திபன் கனவு, கடல் புறா இவர்கள்தான் தமிழ் நாட்டின் மிகப்பெரிய காட்பாதர்கள். ஆனால், “யாரோ பத்து பேரை அடிச்சு நான் டான் ஆகலை. “நான் அடிச்ச பத்து பேருமே “டான்” தான்” என மேற் சொன்ன அத்தனை பேரையும் தன் கைகளில் முத்தமிட வைத்த ராக்கி பாய் தான் வேல் பாரி.
இது நிச்சயம் ஓவர் ஹைப்போ, மேற் குறிப்பிட்ட புதினங்கள் மீதான வெறுப்போ இல்லை. Infact, பொ.செ, சி.ச, பா.க போன்றவற்றை பலமுறை புசித்து பசியாறியவன்தான் நான். வேள்பாரி, வெறும் பசிக்கோ, ருசிக்கோ மட்டுமான உணவல்ல. வாசிப்பவனின் உயிர் வளர்க்கும், தமிழின் உயிர் வளர்க்கும், நம் மண்ணின்… மரபின் உயிர் வளர்க்கும்.. தேவர்கள் கடைந்த அமுதத்திற்கு இணையான எழுத்தமுத துளி.
அப்படி என்னதான் இருக்கிறது வேள்பாரியில்?
சேர சோழ பாண்டிய மன்னர்களை தோற்கடித்த… ஈகை குணத்தில் மகாபாரத கர்ணனுக்கு tough பைட் கொடுத்த… பறம்பின் அதிபதி பாரியின் வாழ்க்கையும், அதி தீவிர சாகசங்களும் மட்டுமல்ல… கொடுக்க கொடுக்க கேட்டுக்கொண்டே இருக்கும் உதட்டு முத்தங்களை போன்ற காதலும் காட்டாறாய் கரைபுரண்டோடும் காவியம் இது.

வாருங்கள் பறம்பு நாட்டுக்குள் ஓரு சின்ன சுற்றுலா போவோம். பறம்பின் காடுகளுக்குள் செல் போன் டவர்கள் இல்லாததால் நம் ஸ்மார்ட் போன்களுக்கு அங்கு வேலையே இல்லை. முழு தொடரையும் முடித்து விட்டு வரும் வரை அது உங்களுக்கு தேவையும் படாது. கபிலர் எனும் பெரும் புலவரின் வழியாய் காணகத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பகுதியிலும்… தேன் தமிழ் அருவியாய் பொழிய… இயற்கையின் பொக்கிஷங்கள் கொல்லிக்காட்டு விதைகளாய்… சோம பூண்டு பானமாய்… கரந்தை குச்சியாய்…தெய்வவாக்கு விலங்குகளாய்… ஏழிலை பாலையாய்…அறுபதாம் கோழியாய் சக்கரவாக பறவையாய் வனமெங்கும் வியாபித்திருக்க… அதன் பிரமிப்பூட்டும் மறுபக்கங்கள் நம்மை மெய்மறக்க செய்யும்.
நட்பு, கருணை, காதல், வீரம், கொடைதிறன், போர் வியூகம், மதி நுட்பம், காடு பற்றிய ஞானம், இவற்றோடு விஞ்ஞானம், அறிவியல், இயற்பியல், வேதியல், உயிரியல்,வான சாஸ்திரம், சிவில் என்ஜினீயரிங் என ஒரு கல்லூரியில் இருக்கும் அத்தனை பாட பிரிவுகளும் கதையோடும்… காட்சி மாந்தார்களோடும் இயந்து சுவாரசியமான வலை பின்னல்களாய் ஒத்துழைக்க.. ஒரு அட்டகாசமான சினிமாவை விஞ்சும் திரைக்கதை ஓர் வாளின் கூர்மையோடும்… அம்பின் வேகத்தோடும் நாவல் முழுக்க பயணித்துக்கொண்டே இருக்கும்.

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என ஐந்தாம் வகுப்பில் படித்த ஒற்றை வரி இங்கு மெல்ல மெல்ல துளிர்த்து.. மனசின் பசுமை போர்வைக்குள் தமிழ் கொடியாய் வளர்ந்து… நம் உணர்வை சுற்றி ஓரு பெருங்காதலாய் சூழ்ந்து… பிரம்மிக்கவைக்கும் அன்பின் ஒளியே நம் கண்கள் வழியாய் உயிருக்குள் கடத்தும்போது இந்த பிறவி ஆசிர்வதிக்கபட்டதாகிறது.
நாவலின் முதற் பாதியில் ஓரு அற்புதமான சேசிங் ஒன்று இருக்கிறது. அடுத்தடுத்த சூழல்களை சூடு பண்ணுவதற்கான ஆரம்பம் அது. படிக்கும் பக்கங்கள் பற்றிக்கொள்ளும் அளவுக்கு பரபரப்பாய் பறக்கும் அத்தருணம், நீங்கள் ரயிலிலோ, பேருந்திலோ இருந்தால் இறங்குமிடம் மறக்கும். படுக்கையறையில் உறக்கம் தொலையும்…. உணவு மேஜையில் உணவு காயும். கோவிலில் தெய்வங்கள் புறக்கணிக்கப்படுவார்கள். உங்கள் காதலியுடன் தனிமையில் இருந்தாலும்….சத்தியமாய் நீங்கள் புத்தகத்தைதான் அனைத்துக்கொண்டிருப்பீர்கள்.
நாவலின் இறுதி… சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒன்றிணைந்து பறம்பின் மீது போர் தொடுக்க… போர்க்களத்தில் முதல் ஆளாய் எதிரியே நோக்கி.. வெறி கொண்டு….மூச்சு வாங்க ஓடிகொண்டிருக்கும் முதல் நபர் நாமாகத்தான் இருப்போம். அவ்வளவு தத்ரூபமாய்…கண் முன்னே எழுத்தில் பிரம்மாண்டமாய் விரியும் அந்த போர்க்கள காட்சிகள் ஆயிரம் பாகுபலிகள் வந்தாலும் ஈடாகாது.

புத்தகத்தை முழுதாய் படித்து முடிக்கும்போது… இயங்கிக் கொண்டிருக்கும் ஓரு கிட்னியை கேட்டாலும் யோசிக்காமல் உடனே கழற்றி தர ஆயத்தமாகும் வள்ளல் தன்மை பாரியின் உடலில் இருந்து நம் உடலுக்கு கூடு பாய்ந்து இருக்கும். அந்தளவு, பறம்பு நாட்டின் மீதும்… பாரியின் மீதும் தீரக்காதல் கொண்டிருப்போம்.
சில புதினங்களுக்கு சாவே இல்லாத அமரத்தன்மை உண்டு. வேள்பாரியும் அதில் ஒன்று. ஆதலால், நீங்கள் நிச்சயம் ஓரு முறை வாசித்துவிடுங்கள். பாரியை நீங்களும் நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
வீர யுக நாயகன் வேள் பாரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.