வெற்றிகரமாக 2022-ம் ஆண்டை நிறைவு செய்து, 2023-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம். எதிர்வரும் 2023-ம் ஆண்டு நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராகி வருகிறோம். அதேநேரம், வரும் ஆண்டில் உலகம் எதிர்கொள்ள போகும் சாதனைகள், சறுக்கல்கள், பிரச்னைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்து, உளவியலாளர்கள், ஜோதிடர்கள் பல கணிப்புகளை கணித்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஒவ்வோர் ஆண்டுக்கான கணிப்புகளையும் வழங்கியுள்ள மிகப் பிரபல உளவியலாளரான பல்கேரிய ஆன்மிகவாதி பாபா வங்காவின் கணிப்புகள், இப்போது பேசுபொருளாகி வருகின்றன. வரும் 2023-ம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புகளில் சூரிய புயல், ஆய்வகங்களில் குழந்தைகளை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல இடம் பெற்றுள்ளன.

யார் இந்த பாபா வங்கா ?
பாபா வங்கா, 1911-ம் ஆண்டு வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகாவில் பிறந்தவர். இவர் ஒரு மூலிகை மருத்துவர், பல்கேரிய ஆன்மிகவாதி மற்றும் உலக கணிப்புகளையும் கூறுபவர். பாபா வங்கா தனது 12 வயதில் நேரிட்ட ஒரு விபத்தில் தனது இரண்டு கண்களையும் இழந்தார்.
பாபா வங்காவால் தன் கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், தனக்கு எதிர்காலத்தைப் பார்க்கக்கூடிய ஒரு சிறப்பு சக்தி இருந்ததாகவும், தனக்குக் கடவுள் தெய்விக தரிசனத்தைக் கொடுத்ததாகவும் கூறி வந்தார். ஆகஸ்ட் 11, 1996-ல் அவர் இறந்தார். இறப்பதற்கு முன், எதிர்வரும் ஆண்டுகள் குறித்து அவர் நிறைய கணிப்புகளைச் செய்தார். அவற்றில் ஒன்று, இந்த உலகம் 5079-ம் ஆண்டில் அழியும் என்பது.
2023-ம் ஆண்டுக்கு பாபா வங்கா கணித்துள்ள கணிப்புகள் இதோ…
பாபா வங்காவின் 2023ம் ஆண்டு கணிப்புகள்
சூரியப் புயல்
சூரியப் புயலானது நாசாவின் கூற்றுப்படி, சூரியப் புள்ளிகளுடன் தொடர்புடைய காந்த ஆற்றலின் வெளியீட்டில் இருந்து வரும் கதிர்வீச்சின் தீவிர வெடிப்பாகும். இந்த புயல்கள் மின்சாரத் தொகுப்புகளை சீர்குலைக்கும், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களில் அரிப்பை ஏற்படுத்தும். சூரியப் புயல் அதிக அதிர்வு எண் கொண்ட ரேடியோ தகவல் தொடர்புகள் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றை பாதிக்கும். எனவே இது நடந்தால் பரவலான மின் இழப்பையும், இணையதள வசதிகளையும் இழக்க நேரிடலாம்.

புவி சுற்றுப்பாதையில் பெரிய மாற்றம்
பூமி ஒவ்வோர் ஆண்டும் ஒரு சாய்ந்த அச்சில் சூரியனைச் சுற்றி வருகிறது. பாபா வங்காவின் கூற்றுப்படி பூமியின் பாதையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டால், உயரும் வெப்பநிலை, அலைகள் மற்றும் கதிர்வீச்சு அளவுகளில் கூர்முனை போன்ற பல சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்படும்.
ஆய்வகங்களில் கரு வளர்ப்பு
பாபா வங்காவின் மூன்றாவது கணிப்பின்படி, 2023-ம் ஆண்டு முதல் பெற்றோர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கருவினை ஆய்வகங்களில் வடிவமைத்துக் கொள்வார்கள் எனவும், தங்களது பிள்ளையின் தோல், நிறம் மற்றும் அவர்களின் பண்புகள் வரையில் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய இதை உறுதி செய்வது போல, ’எக்டோ லைஃப்’ என்ற தனியார் நிறுவனம், பெண்களின் கருவறை போலவே ஆய்வகங்களில் செயற்கையாக கருப்பையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் குழந்தைகள் வரை பிறக்கவைக்க முடியும் எனவும், பாபா வங்கா கணித்தது போலவே, பிள்ளைகளின் தோல், நிறம் மற்றும் அவர்களின் பண்புகளையும் எப்படி இருக்க வேண்டும் என பெற்றோரே தீர்மானிக்க முடியும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாபாவின் 2022 கணிப்புகள் பலித்ததா?
பாபா வங்கா 2022-ம் ஆண்டிற்கும் பல கணிப்புகளை தெரிவித்திருந்தார். அவற்றில் இரண்டு உண்மையாகிவிட்டன. உலகம் முழுவதும் உள்ள பல நகரங்களும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும்; ஃபிரான்ஸ், இத்தாலி மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகள் உட்பட கோடையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வறட்சியால் பாதிக்கப்படுவார்கள் என்று பாபா வங்கா கணித்திருந்தார். அதுபோல இங்கிலாந்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் என பல வாரங்கள் நீடித்த வெப்பம், மற்றும் மழை இல்லாததால் நீர்த்தேக்கங்கள், ஆறுகள் வறண்டதால் நாடு முழுவதும் குழாய்த் தண்ணீருக்கு தடை விதிப்பு என்ற சூழல்கள் உருவாகின.
அதே நேரம், பாபா வங்காவின் மூன்று கணிப்புகள் நிறைவேறவில்லை. சைபீரியாவில் இரண்டாவது தொற்றுநோய் தொடங்கும்; வெப்பநிலை வீழ்ச்சி மற்றும் பூமியின் மீதான அந்நிய படையெடுப்பால் இந்தியாவில் பஞ்சம் ஏற்படும் போன்றவை பொய்த்துப் போயின.
பாபா வாங்காவின் நிறைவேறிய கணிப்புகளில் சில…
பாபா வங்கா, பல ஆண்டுகளில் நிகழக்கூடியவற்றை கணித்துக் கூறியிருந்த நிலையில் அவற்றில் பல பொய்த்தாலும், சில கணிப்புகள் நிறைவேறியுள்ளன. பராக் ஒபாமாவின் தேர்தல் மற்றும் 2004 சுனாமி உள்ளிட்டவற்றை அவர் முன்கூட்டியே அறிவித்ததாக, அவரைப் பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள்.

கடந்த 1989-ம் ஆண்டில், `அமெரிக்க சகோதரர்கள் எஃகு பறவைகளின் தாக்குதலுக்குப் பிறகு வீழ்வார்கள். அப்பாவிகளின் ரத்தம் வடியும்’ என்று கூறினார். இதை, 2001-ல் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றிதான் அவர் குறிப்பிட்டுள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர் .
அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தவர் இருப்பார் என்று பாபா வங்கா கணித்து கூறினார். அதன்படியே பராக் ஒபாமா, ஜனாதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவர்தான் அந்த நாட்டின் கடைசி ஜனாதிபதியாக இருப்பார் என்று பாபா வங்கா கூறியது உண்மையாகவில்லை.