ராகுல்காந்தி, ராமர் போன்றவர் – சல்மான் குர்ஷித்

துறவி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு உத்தரபிரதேச மாநில ஒருங்கிணைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் செயல்பட்டு வருகிறார். அடுத்த மாதம், உத்தரபிரதேசத்துக்கு பாதயாத்திரை வரும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து சல்மான் குர்ஷித் மொரதாபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி ஒரு தெய்வப்பிறவி. நாங்கள் எல்லாம் குளிரில் நடுங்கி, ‘கோட்’ போட்டுக் கொண்டிருக்கும்போது, அவர் வெறும் டி-சர்ட் போட்டு நடந்து சென்றார். ராகுல்காந்தியே சொன்னது போல், அவர் ஒரு துறவி. தவம் போல் மிகவும் கவனமாக பாதயாத்திரை நடத்துகிறார்.

ராமர்-பரதன்

ராமாயணத்தில், ராமரின் பாதுகைகள் எங்கு வேண்டுமானாலும் செல்லும். ராமர் வருவதற்கு முன்பு, அவரது பாதுகைகளை பரதன் அங்கு கொண்டு சென்று வைப்பார்.

அதுபோல், பரதன்களாகிய நாங்கள், ராமரின் பாதுகைகளை உத்தரபிரதேசத்துக்கு கொண்டு வந்துள்ளோம். ராமராகிய ராகுல்காந்தி, பின்னர் வருவார். இதுதான் எங்கள் நம்பிக்கை.

வாஜ்பாயை மதிக்கிறோம்

ஜனவரி 3-ந் தேதி, காசியாபாத் வழியாக உத்தரபிரதேசத்துக்குள் பாதயாத்திரை நுழையும். பாக்பட், ஷாம்லி வழியாக அரியானாவை அடையும். கொரோனா தொடர்பான அறிவியல்பூர்வமான வழிகாட்டு நெறிமுறைகளை பாதயாத்திரையின்போது பின்பற்றுவோம்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை நாங்கள் மதிக்கிறோம். அதனால்தான், அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். மற்ற பா.ஜனதா தலைவர்கள், மரியாதைக்கு உகந்தவர்கள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

மன்னிப்பு கேட்க வேண்டும்

சல்மான் குர்ஷித்தின் கருத்துக்கு பா.ஜனதா செய்தித்தொடர்பாளர்கள் கவுரவ் பாட்டியா, ஷெஷாத் பூனவல்லா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

ஊழல் வழக்கில் ஜாமீனில் இருக்கும் ஒருவரை எண்ணற்ற மக்கள் வணங்கும் கடவுளுடன் ஒப்பிடுவது இந்துக்களின் உணர்வுகளை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் உணர்வுகளையும் புண்படுத்தி உள்ளது.

கடவுள் பக்தியை விட ஒரு குடும்பத்தின் மீதான பக்திக்கு காங்கிரசார் முக்கியத்துவம் அளிக்கிறார்கள். மற்ற மத நம்பிக்கைகளுடன் சல்மான் குர்ஷித்தால் இப்படி ஒப்பிட முடியுமா?

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விளக்கம்

பா.ஜனதாவின் எதிர்ப்பு குறித்து கேட்டதற்கு சல்மான் குர்ஷித் கூறியதாவது:-

கடவுளுக்கு யாரும் மாற்று கிடையாது. ஆனால், கடவுள் காட்டிய வழியில் யார் வேண்டுமானாலும் நடக்க முயற்சிக்கலாம்.

ஒருவர் கடவுள் காட்டிய வழியில் நடக்கிறார் என்றால், அவரை புகழ என்ன சொல்வது? கடவுள் போன்றவர் என்று சொல்வது இல்லையா?

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.