Tamilnadu Corona update : உலகையே ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக தலைகீழாக மாற்றிவிட்ட கொரோனா தொற்று, சற்று அடங்கியிருந்த நிலையில், தற்போது பூதமாய் கிளம்பியுள்ளது. முன்பு போலவே, தற்போதும் சீனாவில் தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று தீடீர் ஏற்றம் கண்டுள்ளது. இந்தியாவில் தொற்று எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருந்தாலும், 4 பேர் சீனாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் bf.7 கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அதன் பரவல் அதிகரிக்காமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் கைக்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, கொரோனா தொற்று மீண்டும் பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் சூழ்நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கொரோனா bf.7 தொற்று குறித்து கடந்த மூன்று நாட்களாக பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று (டிச. 27) காலை 9. 40 மணியளவில் இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தனர். அதில் பிரதீபா (39) என்ற பெண் மற்றும் அவரது மகள் பிரத்தியங்கார ரிகா (6) என்ற குழந்தைக்கும் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கி உள்ள பிரதீபா மற்றும் குழந்தை பிரத்தியங்கராவை சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட பிரதிபாவின் கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் மனைவி மற்றும் குழந்தை சேர்ந்து தங்கியுள்ளனர்.
தற்போது சுப்பிரமணியம் வேலைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். இதனால் தமிழகம் திரும்பிய தாய், மகள் இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்த நிலையில், மதுரை விமான நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தீவிர கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இலங்கை விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைககை துரிதப்படுத்த வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குநரகம், அனைத்து அரசு மருத்துவமனைகளையும் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.