புரி ஒடிசாவில் உள்ள புரி ஜெகன்னாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தின்போது, பள்ளி மாணவியர் ஒன்பது பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்ததை அடுத்து, பள்ளி குழந்தைகளுக்கு என, தற்காலிகமாக தனிவரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து மாணவ – மாணவியர், புரியில் உள்ள ஜெகன்னாதர் கோவிலைக் காண நேற்று முன்தினம் வந்தனர்.
சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற மாணவியரில் ஒன்பது பேர், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
புரி எஸ்.பி., கே.வி. சிங் நேற்று கூறியதாவது:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது மாணவியரும் சிகிச்சை முடிந்து, நேற்று வீடு திரும்பினர். இச்சம்பவத்தையடுத்து, ஜெகன்னாதர் ஆலயத்தில் பள்ளி குழந்தைகளுக்கு, நேற்று முதல் தனிவரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், ஏராளமான பள்ளி குழந்தைகள் ஆலயத்துக்கு வருகின்றனர். இதை கருத்தில் வைத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement