சீனா டூ தமிழ்நாடு… விமானம் மூலம் மதுரை வந்த கொரோனா வைரஸ்- ரெண்டு பேருக்கு பாசிடிவ்!

உருமாறிய கொரோனா வைரஸ். அதுக்கு பெயர் BF.7 வைரஸ். இந்த விஷயம் தான் தமிழகத்தின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய
கொரோனா வைரஸ்
வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழு வீச்சில் தயாராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்திருந்தார்.

தாய், மகளுக்கு கொரோனா

அதேநாளில் பரபரப்பூட்டும் நிகழ்வு ஒன்று அரங்கேறியிருக்கிறது. சீனாவில் இருந்து விமானம் மூலம் இலங்கை வழியாக மதுரை வந்த தாய் பிரதிபா (39) மற்றும் அவரது 6 வயது மகள் பிரித்தியங்கார ரிகா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை வந்து ஏர் லங்கா விமானம் மூலம் மதுரை திரும்பியுள்ளனர். இருவருக்கும் எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை.

விருதுநகர் வீட்டில் ஐசோலேஷன்

ஆனால் ரிசல்ட் மட்டும் பாசிடிவ் என்று வந்துள்ளது. இவர்களது மாதிரிகள் அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருவரும் விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளான தாய் மற்றும் மகள் ஆகியோர் தங்களது வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

சீனா டூ ஜெர்மனி

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதிபாவின் கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் மனைவியும், குழந்தையும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த சூழலில் சுப்பிரமணியம் வேலைக்காக ஜெர்மனி புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் பிரதிபா மற்றும் பிரத்தியங்கார ரிகா ஆகிய இருவரும் தமிழகம் திரும்ப முடிவு செய்தனர்.

70 பயணிகளுக்கு பரிசோதனை

நேரடியாக விமானம் இல்லாத நிலையில் இலங்கை வழியாக மதுரை திரும்பியுள்ளனர். இந்த சூழலில் தான் சீனாவில் இருந்து கொரோனா தொற்றுடன் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் வந்த விமானத்தில் இருந்த 70 பயணிகளும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை ஆய்வகத்தில் இருந்து பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் தான், உருமாறிய வைரஸா?

தீயாய் பரவும் தகவல்

இல்லை வேறு ஏதேனும் ஒரு வகை கொரோனா வைரஸா? என்பது தெரியவரும். சீனாவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது தகவல் தீயாய் பரவி வருகிறது. இதுதொடர்பாக உரிய விவரங்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 சதவீத பரிசோதனை

கடந்த 4 நாட்களில் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு வருகை புரிந்த பயணிகளில் ரேண்டமாக 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.