கர்நாடகாவில் இருந்து 400 கிலோ புகையிலை பொருட்களை சேலத்திற்கு கடத்தி வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் போலீசார், காரைக்காடு சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் மக்காச்சோள மூட்டைகளுக்கு அடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காதர் பாஷா (52) என்பதும், இவர் கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லாரியில் இருந்த ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஓட்டுநர் காதர் பாஷா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய கடத்தி வந்த குளத்துறை சேர்ந்த ரமேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.