கர்நாடகா: வெளிநாடுகளில் இருந்து கடந்த 24, 25, 26 ஆகிய தேதிகளில் இந்தியா வந்த பயணிகளில் 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் ஓமிக்ரான் பி.எப்.5 வைரஸ், பி.எப்.7 வைரசாக உருமாற்றமடைந்து சீனா மட்டுமில்லாது பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த உருமாறிய வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24, 25, 26 ஆகிய தேதிகளில் 498 விமானங்கள் மூலம் இந்தியா வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
அதில் 1,780 பேர்களிடம் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் அது உருமாறிய பி.எப்.7 வகை வைரஸ் தானா என்பதை கண்டறிய அவர்களுக்கு மரபணு சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே பெங்களூருவில் கடந்த நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 22-ம் தேதி 16 பேருக்கும், 23-ம் தேதி 10 பேருக்கும், 24-ம் தேதி 19 பேருக்கும், 25-ம் தேதி 22 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு வேகம் பிடிப்பதை உறுதி படுத்தியுள்ளது.