தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு வழங்கப்படாதவை கண்டித்து விவசாயிகளும் அரசியல் கட்சிகளும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் பொங்கல் பரிசு உடன் செங்கரும்பு வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் வரும் ஜனவரி 2ஆம் தேதி அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடிக்கு பழனிச்சாமி அறிவித்துள்ளார். திமுகவின் கூட்டணி கட்சிகளும் தமிழக அரசுக்கு நெருக்கடி அளித்து வரும் நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் செங்கரும்பு கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து விவாதித்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் செங்கரும்பு வழங்கப்படும் என்ற தகவல் கசிந்துள்ளது.