ஓட்டப்பிடாரம் அருகே திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில், கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், தருவைகுளம் ஏஎம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் தங்கமுனியசாமி (26), தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக் வேலை செய்துவந்த இவரும், துவரந்தை கிராமத்தைச் சேர்ந்த சீதாசெல்வி (24) என்பவரும் காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை வழக்கம் போல் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவரும் தூக்கில் தொங்கியவாறு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தருவைகுளம் போலீசார், இரு உடல்களையும் கைபற்றி பிரதே பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, தூத்துக்குடி சப்-கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். புதுமண தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் தற்கொலைக்கு இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்னைகள் காரணமா அல்லது காதல் திருமணம் செய்ய குடும்பத்தை எதிர்த்து செயல்பட்டதால் குடும்பத்தினரிடம் இருந்து ஏதேனும் அழுத்தம் வந்ததா என்று விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM