பீகாரில் 17 மாநகராட்சி, 68 நகராட்சிகளுக்கு 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

பாட்னா: பீகாரில் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் வாக்குகள் 20ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இன்று 17 மாநகராட்சிகள் உட்பட 68 நகராட்சிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 23 மாவட்டங்களுக்கு 7,088 வாக்குச்சாவடிகளிலும், 286 நடமாடும் வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆயுதமேந்திய போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மொத்தம் 1,665 பதவிகளுக்கு 11,127 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 5,154 ஆண் வேட்பாளர்களும், 5973 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அடுத்த மாதம் பதவியேற்பார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.