"எடப்பாடியை ஆதரிப்பவருக்கு எப்டிங்க வீடு தர்றது"-நூதன விளம்பரத்துக்கு துணை நடிகர் விளக்கம்

திருநெல்வேலியை சேர்ந்த திரைப்பட துணை நடிகர் ஐசக் பாண்டியன் என்பவர், தன் வீட்டை வாடகை விடுவதற்கு சில கண்டிஷன்கள் போட்டுள்ளார். அவை தற்போது வைரலாகி வருகின்றது. `எப்போதுமே எல்லா வீட்டு உரிமையாளர்களுமே வீடு வாடகைக்கு விடுகையில் கண்டிஷன் போடுவார்கள் தானே… இதிலென்ன இருக்கு’ என்கின்றீர்களா? நீங்கள் சொல்வது சரிதான்… எல்லோரும் கண்டிஷன் போடுவார்கள். ஆனால் சில கண்டிஷன்கள் தான் விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். விநோதமாக யோசித்து அப்படி கண்டிஷன் போடுவோரை எப்போதுமே இந்த உலகம் எக்ஸ்ட்ரா ரெண்டு நிமிஷம் நிண்ணு பார்க்குமில்லையா… அப்படித்தான் ஐசக் பாண்டியனின் விளம்பரமும் அமைந்துள்ளது.
அப்படி என்ன வித்தியாசமான கண்டிஷனை துணை நடிகர் ஐசக் பாண்டியன் போட்டார் தெரியுமா? இதோ இதுதான் – `வீடு வாடகைக்கு – குடிகாரர், வடமாநிலத்தவர், எடப்பாடி அதிமுக-வினர் அனுக வேண்டாம்’! இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும், “அட என்னங்க இது… என்னதான் விமர்சனமா இருந்தாலும், மது குடிப்போரையும் அரசியல்வாதிகளையும் இப்படியா கம்பேர் பண்றது” என்று கேட்க தொடங்கினர். தனது இந்த கண்டிஷன்களுக்கு, ஐசக் பாண்டியன் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்! அவரை நாம் தொடர்புகொண்டு பேசுகையில், அவர் அதை நம்மிடையே கூறினார்.
image
அவர் நம்மிடம் சொன்னது:
“என்னை பொறுத்தவரை, குடி பழக்கமென்பது இளைஞர்களை பின்னோக்கி கொண்டு செல்வதாகும். இன்றைய தமிழ் இளைஞர்கள், குடிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். இவர்களால் தமிழ் சமுதாயத்தை பின்னோக்கி செல்லும். அவர்களால் வீட்டிலும் பிரச்னை வரும். அதனால் அவர்கள் வீட்டு வாடகை கோரி என்னை அனுக வேண்டாம் என குறிப்பிட்டேன்.
இப்படி குடியால் மூழ்கிய நம்மூர் இளைஞர்கள் பலரும், வேலை வாய்ப்பையும் இழந்து வருகின்றனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் இங்கே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.. திருப்பத்தூர் போன்ற தமிழ்நாட்டு மாவட்டங்களில்கூட தமிழ் பேசுவோரை விட இந்தி பேசுவோரும் பிற வட மாநில மொழி பேசுவோரும்தான் அதிகம் உள்ளனர். அதையெல்லாம் காணும்போது, நம் எதிர்காலமே கேள்விக்குறியானதை உணர்ந்தேன். நம் கலாசாரமே கெட்டுப்போகிறது. விரைவில் தமிழ் கலாசாரம் மறையுமே என்று அச்சப்படுகிறேன். அதனால் அவர்களும் வாடகைக்கு வீடு தொடர்பாக அனுக வேண்டாமென தெரிவித்தேன்.
 image 
அடுத்தபடியாக, எடப்பாடி அணியினர். இவர்களை மறுக்க இரு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் வீடு கேட்க வரும் போது, 4 கால்களில் தவழ்ந்து வருவர்; பின் என்னையே தெரியாது என சொல்லிவிடுவர் என்ற அச்சம். இந்த அச்சம், என்னைப் போன்ற எல்லா சாமாணியனுக்கும் இருக்கிறது. இரண்டாவது காரணம், இந்த எடப்பாடி பழனிசாமி தான், தனது ஆட்சிக்காலத்தில் வடமாநிலத்தவர்களை இங்கே வேலைக்கு அமரவைத்தார். கட்டட வேலைகள் தொடங்கி மின்சார – போக்குவரத்துறை அரசு ஊழியர்கள் வரை இன்று பலரும் நம் ஊரில் வட மாநிலத்தவர்கள்தான். காரணம், அன்று எடப்பாடி அவர்களை அனுமதித்தது. தன் பதவி நிலைக்க, மத்திய அரசு சொல்வதையெல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று அவர் அப்படி செய்தார். அதன் பலன்… இன்று கிராமங்களில்கூட வட மாநில மின் ஊழியர்கள் நிறைந்து கிடக்கின்றனர்.
இதை சொல்வதால் நான் ஆளுங்கட்சி என்றோ, அல்லது வேறு கட்சியை சேர்ந்த நபரென்றோ தயவுசெய்து பொருள்பட வேண்டாம். நான் எந்த கட்சி உறுப்பினரும் அல்ல; தவறுநடந்தால், ஆளுங்கட்சியாக இருந்தால் விமர்சிக்கும் சாமாணியன் தான் நான். திமுக-வையும் கருத்துகளால் தாக்குவேன். சொல்லப்போனால் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக மேல் எனக்கு நன்மதிப்பு இருந்தது. ஏனெனில் அப்போது மாநில அரசை கண்டு, மத்திய அரசு பயந்தது. `அந்த மோடியா இந்த லேடியா’ என துணிச்சலாக கேட்டவர் அவர். அப்படிப்பட்டவர் இருந்த சிம்மாசனத்தில் எடப்பாடியை அமர வைத்தார்கள். பதவி மோகத்தில், பதவியை தக்கவைத்துக்கொள்ள அவர் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை, வடமாநிலத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்தார். இன்றைய போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை எல்லாமே இதற்கு சாட்சி. தமிழர்களின் சாப்பாட்டை, இந்திக்காரர்களுக்கு அவர் கொடுத்தார் என்றே சொல்வேன். 
image
அப்படிப்பட்ட எடப்பாடியை ஆதரித்து, அவருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு, எப்படி என் வீட்டில் நான் இடம் கொடுக்க முடியும்? நான் சொல்லும் காரணம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை” என்றார்.
ஐசக் பாண்டியன், நடிகர் தனுஷின் மாரி திரைப்படத்தில் வில்லனுடன் வரும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். சீவலப்பேரி பாண்டி படம் தொடங்கி எந்திரன், மாரி போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பதாக கூறும் அவர் தற்போது திருநெல்வேலியில் வசித்து வருகிறார். அங்குதான் தனது வீட்டில் இந்த விளம்பரத்தையும் வைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.