குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 30 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே 31 ஆம் தேதி மற்றும் ஜனவரி 01 ஆம் தேதி 2023 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இதற்கிடையில் தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலத்தின் அனைத்து அருவிகளில் குளிக்க தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.