“பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்ததால் ரொனால்டோ தடைகளுக்கு ஆளானார்” – துருக்கி அதிபர்

அங்காரா: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் ரொனால்டோ அரசியல் ரீதியான தடைகளுக்கு உள்ளானார் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

2022 உலகக் கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ், நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடக்க வரிசையில் களமிறக்காமல் வெளியே அமர வைத்தார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மொராக்கோ உடனான காலிறுதிப் போட்டியிலும் ரொனால்டோ கடைசி 30 நிமிடங்களில்தான் விளையாட அனுப்பப்பட்டார். இப்போட்டியில் மொராக்கோ வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், நடந்து முடிந்த 2022 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் பேசினார். அப்போது போர்ச்சுக்கல் அணியின் ரொனால்டோ குறித்து அவர் கூறும்போது, “பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசியதால் ரொனால்டோ அரசியல் ரீதியான தடைகளுக்கு உள்ளானார். உலகக் கோப்பை போட்டியில் ரொனால்டோவை போர்ச்சுக்கல் அணி சரியாகப் பயன்படுத்தவில்லை. வீணடித்துவிட்டார்கள். ரொனால்டோ போன்ற ஒரு கால்பந்து வீரரை போட்டி முடிய 30 நிமிடங்களே உள்ள நிலையில் ஆடுகளத்திற்கு அனுப்பியது அவரது உளவியலை அழித்து, அவரது ஆற்றலையும் இழக்கச் செய்தது” என்றார்.

ஆனால், அரசியல் ரீதியாக ரொனால்டோ எவ்வாறு தடைகளுக்கு உள்ளானார் என்ற ஆதாரத்தை எர்டோகன் அளிக்கவில்லை. முன்னதாக, உலகக் கோப்பை போட்டியின் போது ரொனால்டோ, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட வரிகளை தாங்கி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால், அப்புகைப்படங்கள் போலியானவை என்று பின்னர் அறியப்பட்டது. இந்த நிலையில், துருக்கி அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.