2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி குறித்த விரைவுப் பார்வை இது.
இந்த ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதில் போட்டியிடவில்லை. அது காங்கிரஸ் அனுதாபிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு முன்னதாகவே இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. தமிழகத்தின் கன்னியாகுமரியில் தனது யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி இப்போது இந்தியா ஒற்றுமையாகத் தானே இருக்கிறது. இந்த யாத்திரைக்கு என்ன அவசியம் என்ற கேள்வியை, விமர்சனத்தை எழுப்பியவர்களுக்கு தன் பாணியில் பதிலடி கொடுத்தார்.
“இந்தியாவில் எல்லா ஜனநாயக அமைப்புகளின் வாயில்களும் மூடப்பட்டுள்ளன. நாடாளுமன்றம், தேர்தல்கள், ஊடகங்கள் என எல்லாம் முடங்கியுள்ளன. அப்படியென்றால் மக்களை எப்படி அடைவது. அதனால்தான் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்த இந்த யாத்திரையை மேற்கொள்கிறார். வெறுப்புப் பிரச்சாரங்களால் பிரிந்து கிடக்கும் தேசத்தை ஒற்றுமையாக்குவேன்” என்று கூறினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா என்று பல மாநிலங்களைக் கடந்து தற்போது தலைநகர் டெல்லிக்கு ராகுல் காந்தி தனது யாத்திரையை முன்னேற்றியுள்ளார்.
வழிநெடுக ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், சிறுமிகள் என எல்லா வயதினரும் திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், ஆர்பிஐ முன்னாள் ஆளுநர், சமூக செயற்பாட்டாளர்கள், தோழமைக் கட்சியினர் எனப் பலரும் ஆதரவு அளிக்க ஆரம்பத்தில் பாஜகவால் சட்டை செய்யப்படாத யாத்திரை இப்போது அன்றாடம் விமர்சனம் செய்யப்படும் கவனம் பெற்றுள்ளது. கரோனா பரவல் பற்றிய செய்தி வெளியானதுமே இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பாஜக கெடுபிடி காட்டியது இந்த யாத்திரை நாளுக்கு நாள் பெற்றுவரும் பிரபலம் பாஜகவுக்கு குடைச்சலைத் தந்துள்ளதன் விளைவு என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
“காங்கிரஸ் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையின் பலன் 2024 தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். அப்போது இந்த யாத்திரை வாக்குகளே எதிரொலிக்க வேண்டும். பாஜகவை எதிர்க்கும் சக்திக்கு ஒரு கொள்கையும், ஒரு தலைவரும், ஒரு நல்ல செயல்பாட்டுத் திறன் கொண்ட இயந்திரமும் இருந்தால் போதும் அதை எளிதாக வென்று விடலாம். அதற்கு உதாரணம் டெல்லி மாநகராட்சி தேர்தல். பாஜகவை ஆம் ஆத்மியால் வீழ்த்த முடியும் என்றால் காங்கிரஸாலும் வீழ்த்த முடியும் என்பது தான் நம்பிக்கை” என்று இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் பேசியது இங்கே நினைவுகூரத்தக்கது.
2022 அரசியல் களத்தில் குஜராத்தின் வரலாற்று வெற்றி மூலம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி மோடி தடம் பதித்திருக்கிறாரோ அதற்கு சற்றும் சளைக்காத தாக்கத்தை ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஏற்படுத்தியிருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.