சேலம்: ‘வாரிசு அரசியலால் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பம் மட்டுமே பயனடையுமே தவிர, பொதுமக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் ராஜ பரம்பரை போல அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டி விட்டார்’ என முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில், மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியது: “ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையும் வகையில் தொடங்கப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டம் அதிமுக ஆட்சியில் நிறைவடையும் தருவாயில் இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் கடந்தும், அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால், திட்டத்தை உடனடியாக நிறைவேற்றினால், அதிமுக-வுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால் திமுக அரசு, அத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. எப்போது திட்டத்தை நிறைவேற்றினாலும், திட்டத்தை கொண்டுவந்த எங்களை, மக்களின் மனதில் இருந்து அழித்து விட முடியாது. சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகள் இணைப்பு திட்டமும் கிடப்பில் போடப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி 7ம் தேதியுடன் திமுகவின் 20 மாத ஆட்சி முடிவடைகிறது. மூன்றில் ஒரு பாகம் நடந்த திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் என்ன செய்தார்கள்?
மக்கள் நலனில் அக்கறை இல்லாத பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார். வாரிசு அரசியலால் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் மட்டுமே பயன் அடையுமே தவிர, மக்களுக்கு எந்த பயனும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் ராஜ பரம்பரை போல அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டிவிட்டார். உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி அமைச்சரானல் கூட வரவேற்போம் என சேலத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள கே.என்.நேரு கூறியுள்ளதை பார்க்கும் போது அடிமைத்தனத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட அமைச்சர்களால் பொதுமக்களுக்கு எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும்.
அதிமுக ஆட்சியில் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டபோது, திமுக கடுமையாக எதிர்த்தது. ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய 2-வது சாலை திட்டமாக இது அமைந்துள்ளது. விவசாயிகளை பாதிக்காத வகையில் நிலம் எடுக்கப்பட்டது. வழக்கமான இழப்பீட்டைவிட 4 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மரங்கள், கிணறுகள், வீடுகள் என தனித்தனியே மதிப்பீடு செய்யப்பட்டது. 92 சதவீத விவசாயிகள் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், 8 சதவீத விவசாயிகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும் தூண்டிவிட்டு திட்டத்தை நிறுத்தி விட்டனர்.
ஆனால், இப்போது 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். ஆட்சியில் இல்லாத போது எதிர்த்துவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இரட்டை வேடம் போடுகின்றனர். ஒரு திட்டம் கொண்டு வரும்போது வேண்டும் என்றே எதிர்ப்பதுதான் திராவிட மாடல். இதேபோல, சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட ராணுவ உதிரிப்பாக உற்பத்தி தொழிற்சாலை, சர்வதேச தரத்தில் ‘பஸ் போர்ட்’ அமைக்கும் திட்டத்தையும் திமுக அரசு கிடப்பில் போட்டு விட்டது. ‘பஸ் போர்ட்’ திட்டம் கொண்டு வந்தால்தான் சேலம் வளரும், சேலம் இந்திய அளவில் பிரசித்தி பெற்ற நகரமாக விளங்கும்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த ‘அம்மா கிளினிக்’ திட்டமும் மூடப்பட்டுவிட்டது. மக்களுக்கான பல நலத்திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்ததை திமுக முடக்குவதை தான் ‘திராவிட மாடல்’ ஆட்சியாக உள்ளது. எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சேலம் மாவட்டம் அதிமுக-வின் கோட்டை என மக்கள் மெய்பித்துக்காட்டுவார்கள். அதிமுக ஆட்சியில் தொண்டரும் முதல்வராகலாம். அதிமுக எப்போதும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்”
இவ்வாறு அவர் பேசினார்.