`பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு; முறைகேடுகளே தாமதத்திற்கான காரணம்!'

கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்புகள் இடம்பெற்று வந்தன. இந்த ஆண்டு வழங்கவிருக்கும் பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் பொருட்களின் பட்டியலை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இந்த பட்டியலில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

விவசாயிகளின் போராட்டம்!

கரும்பை பொங்கல் தொகுப்பில் சேர்க்கக்கோரி விவசாயிகள் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அதிமுக சார்பில் பொங்கல் தொகுப்பில் கரும்புகளை சேர்க்கக் கோரி வரும் ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், பொங்கல் தொகுப்பில் முழு கரும்பை சேர்க்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சுவாமிமலை சுந்தர விமலநாதனிடம் பேசினோம். அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிச்சாமி ஒரு குடும்ப அட்டைக்கு 2 அடி கரும்பை வழங்கினார். அதனை மாற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரு குடும்ப அட்டைக்கு முழு கரும்பை வழங்க உத்தரவிட்டார். அவ்வாறு உத்தரவிட்ட முதல்வரே இந்தாண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லை என்று சொன்னால் நாங்கள் எங்கே போவது?

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் சுவாமிமலை சுந்தர விமலநாதன்

கடந்த ஆண்டு கரும்பு கொள்முதலில், இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் பல குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றன. அதனால் பல விமர்சனங்களும் எழுந்தன. அது அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக நடந்த ஒன்று. அதற்காக கரும்பை கொள்முதல் செய்யாமல் தவிர்ப்பது எப்படி முறையாகும்?

கடந்தாண்டு ஒரு கரும்பிற்கு கொள்முதல் விலையாக 33 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளிடம் சென்று சேர்ந்தது அதிகபட்சமாக 13 ரூபாய் மட்டுமே. பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் தொகுப்பு குறித்து நான்கு முறை முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். ஆனால், நான்கு முறையுமே ஒரு தெளிவான முடிவு எட்டப்படவில்லை. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தேன்.

இந்த வழக்கில், தமிழகத்தில் விளையும் பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து வாங்காமல், தமிழக விவசாயிகளிடமிருந்தே வாங்க வலியுறுத்தினேன். அந்த வழக்கில் தமிழக அரசின் வழக்கறிஞர் வாய்தா மேல் வாய்தா வாங்கினார். ஆலைகளுக்கு செல்லும் கரும்பு விவசாயிகளுக்கு வங்கிகள் ரூபாய் 70 ஆயிரம் வரை கடன் வழங்குகிறது. ஆனால் செங்கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு எந்த வங்கியும் கடன் வழங்குவது இல்லை. இதனால் வட்டிக்கு கடன் வாங்கி தான் விவசாயம் செய்து வருகிறோம். கடனை அடைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சமாக 40 ரூபாயாவது கரும்பிற்கு அரசு வழங்க வேண்டும்.

நெல் கொள்முதல் செய்வது போல, கரும்புகளையும் கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கி கணக்கில் பணத்தை முறையாக செலுத்த வேண்டும். இந்த வருடம் குறைந்தபட்சமாக 40 ரூபாய்க்கு ஒரு கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்தாண்டு தமிழக அரசு தரமற்ற வெல்லத்தை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை வெல்லம் வழங்குவதைப் பற்றி தமிழக அரசு ஒன்றும் பேசாதது வருத்தம் அளிக்கிறது.

தாமதமாக இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். பொங்கல் தொகுப்பில் கட்டாயமாக பச்சரிசி, வெல்லம், கரும்புகள் வழங்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். மேலும் கரும்பு கொள்முதலில் நடந்த முறைகேடுகளை எதிர்கொள்ள முடியாததே இந்த அறிவிப்பின் தாமதத்திற்கு காரணம் ஆகும்” என்று பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.