புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்தபோது தாழ்த்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த இந்துக்களுக்கு மட்டும் எஸ்.சி.அந்தஸ்தில் இடஒதுக்கீடு வழங் கப்பட்டது. கடந்த 1956-ம் ஆண்டில் சீக்கிய மதம், 1990-ம் ஆண்டில் பவுத்த மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. பிரிவுக்கான இடஒதுக்கீடு சலுகை அளிக்கப்பட்டது.
இதேபோன்று இந்து மதத்தில் இருந்து முஸ்லிம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களுக்கு மாறிய தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இதனிடையே மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு புதிதாக ஆணையத்தை அமைத்துள்ளது.
மத்திய அரசு நியமித்துள்ள ஆணையத்துக்கு எதிராக பிரதாப் பாபுராவ் பண்டிட் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்டோருக்கும் எஸ்.சி. அந்தஸ்து வழங்கக் கோரி கடந்த 2004-ம் ஆண்டு முதலே உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு வருகிறோம். ஆனால் இதுவரை நீதி கிடைக்கவில்லை. இந்த ஆணையநியமனத்தை ரத்து செய்துவிட்டு எங்களுக்கு விரைந்து நீதி கிடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.