சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் 7 பேர் பலி… ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நெல்லூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பேரணியில், கூட்ட நெரிசலால் ஒரு பெண் உள்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 8 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

முன்னாள் முதலமைச்சரும், தற்போதையை எதிர்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் அரசை கண்டிக்கும் விதமாக பல்வேறு பேரணிகள், கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டுகூர் என்ற நகரத்தில் சந்திரபாபு நாயுடு நேற்று உரையாற்ற இருந்தார். நேற்று மாலை சந்திராபாபு நாயுடுவின் வாகனம் வந்ததில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

சந்திரபாபு நாயுடுவை காண வேண்டும் என்ற நோக்கில், கூட்டம் முண்டியடித்துச்செல்ல முயன்றதில், சிமிண்ட் தடுப்பு உடைந்து பலரும் அங்கிருந்த பாதளச்சாக்கடை வாய்க்காலில் விழந்துள்ளனர். இதில்தான் ஏழு பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பொதுக்கூட்டத்தை ரத்து செய்த சந்திரபாபு உயிரழந்தோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிப்பதாக அறிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் குழந்தைகள் யாராவது அவர்களின் கல்விக்கும் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிப்பதை உறுதிசெய்யவும் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். 

வரும் 2024ஆம் ஆண்டு ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சந்திரபாபு நாயுடு தொடர் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்தி வருகிறார். 2019ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டியிடம் படுதோல்வியடைந்து ஆட்சியை இழந்த சந்திரபாபு நாயுடுவுக்கு, சமீபத்தில் நடந்த கட்சி மாநாட்டில் அவருக்கு பலத்த மக்கள் ஆதரவு கிடைத்திருந்தது. 

மேலும், வரும் ஜனவரி மாதத்தில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் 4 ஆயிரம் கி.மீ., நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். இளைஞர்கள் தங்கள் மாநிலத்திற்காக குரல் கொடுக்கவும், அவர்களின் தேவைக்காக போராடவும் ஊக்கமளிக்கும் வகையில் இந்த பேரணி திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், வரும் 2024ஆம் ஆண்டில் தனது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைக் பிடிக்காவிட்டால், அதுதான் தனது கடைசி தேர்தலாக இருக்கும் என சந்திரபாபு தெரிவித்திருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.