கொரோனா பரவலை தடுக்க என்ன வழி? புதிய தடுப்பூசிகள் தேவையா?

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா போன்ற சில நாடுகளில் பரவும் பி எப் 7 இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன.

ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மற்ற நாடுகளை விட சீனாவில் பிஎப்7 வைரஸ் மிக மோசமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் பாதிப்பு பதிவாகியதாகவும், 5000 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வேகமாக பரவக்கூடிய வைரஸாக இருப்பதால் இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்குமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. எனவே பி எப் 7 வைரஸிலிருந்து மக்களை தற்காத்துக் கொள்ள புதிய தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்படுமா அல்லது பூஸ்டர் தடுப்பூசியே போதுமானதா என்ற விவாதம் உருவாகியுள்ளது.

இது குறித்து புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் சத்யஜித் ராத், “சீனா போன்ற நிலை இங்கேயும் ஏற்படும் என்று கூற முடியாது. இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசிகளும் அதிகளவில் போடப்பட்டுள்ளன.

கொரோனா மூன்று அலைகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொற்று பாதிப்பு பரவியது. தற்போது உலகளவில் உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே உருமாற்றம் எல்லா இடங்களிலும் உள்ளது. நாம் அடிப்படையில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும். உருமாறிய கொரோனா வைரஸ்களை கண்காணிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் அடுத்த தலைமுறை தடுப்பூசிகளை உருவாக்க வேண்டும். ஆனால் தற்போது இரண்டாவது பூஸ்டர் டோஸ் தேவை இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். 27 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 3ஆவது, 4ஆவது டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்தியாவில் மூன்று டோஸ்கள் போடப்படும் நிலையில் 4ஆவது டோஸ் தடுப்பூசி இப்போது தேவை இல்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.