வாஷிங்டன்: அரசு சாரா அமைப்புகளில் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ள நிலையில், அதை திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் ட்விட்டர் பதிவில், ”அரசு சாரா அமைப்புகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெண்கள் பணிபுரிய தடை விதிக்கும் தலிபான்களின் உத்தரவு அபாயகரமானது. பல லட்சக்கணக்கான ஆப்கன் மக்களுக்கு, மனிதாபினமான உதவிகள் மிகவும் அவசியம். அந்த உதவிகள் கிடைத்தால்தான் அவர்களால் உயிர்வாழ முடியும். அரசு சாரா அமைப்புகள் அவர்களை அணுகுவது மிகவும் முக்கியம். எனவேதான், அரசு சாரா அமைப்புகளில் பெண்கள் பணிபுரிய விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். நானும் அவர்களுடன் இணைந்து இதை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
அரசு சாரா அமைப்புகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் கடந்த சனிக்கிழமை தடை விதித்தனர். அதற்கு சில நாட்களுக்கு முன்பாக, பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் தடை விதித்தனர்.
தலிபான்களின் இந்த செயலுக்கு ஐநா பாதுகாப்பு அவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசு சாரா அமைப்புகளில் பெண்கள் பணிபுரிய தடை விதித்திருப்பதன் மூலம், மனிதாபிமான உதவிகள் உரியவர்களுக்குச் செல்வது தடைபடும் என தெரிவித்துள்ள ஐநா பாதுகாப்பு அவை, ஆப்கன் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தலிபான்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு இது எதிரானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோல், பெண்கள் கல்வி கற்க தடை விதித்திருப்பது கவலை அளிக்கக்கூடியது என தெரிவித்துள்ள ஐநா பாதுகாப்பு அவை, பெண் கல்விக்கு எதிரான தடையை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.