தமிழக இளைஞர்களே கவனியுங்க! கருடா ஏரோ ஸ்பேஸில் வேலை வாய்ப்பு

ட்ரோன் உற்பத்தி மற்றும் சேவை துறையில் வளர்ந்து வரும் நிறுவனமான கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனம், பல்வேறு முக்கிய செயல்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலங்களில் பொது இடங்களில் கிருமி நாசினிகள் தெளிப்பது, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட சேவைகளை செய்து வந்தது. அதேபோல் உணவு டெலிவரி, மருந்து டெலிவரி, பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கு உதவி உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்த நிறுவனத்தின் அம்பாசிடராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்திற்கு டைப் சர்டிபிகேஷன் எனப்படும் வானில் ட்ரோன்கள் பார்ப்பதற்கான சிறப்பு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதேபோல் ஆர்டிபிஓ எனப்படக்கூடிய சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் ட்ரோன் இயக்கும் தொழில்நுட்பத்தை ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் தகுதியை இந்த நிறுவனம் தற்போது பெற்றுள்ளது. 

இது குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கருடா ஏரோஸ்பேஸ் அலுவலகத்தில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி அக்னீஸ்வரர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “மத்திய அரசு வழங்கியுள்ள இந்த சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளதால் கிராமப்புறங்களில் வேலை இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் எனவும் பயிற்சி முடிந்ததும் அவர்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் வரையிலும் கடன் உதவி பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தற்போது தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பூச்சி மருந்துகள் தெளிக்கும் பணியை செய்து வருவதாகவும் இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக வழக்கமான முறையில் பூச்சி மருந்துகள் தெளிப்பதை விட ட்ரோன்களை பயன்படுத்தி பூச்சி மருந்துகள் தெளிப்பதால் 60-லிருந்து 70% வரை பூச்சி மருந்துகள் பயன்பாடு குறையும் எனவும் எழுவதிலிருந்து 80 சதவீதம் வரை தண்ணீர் பயன்பாடும் குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.”

“இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று பயிற்சி அளிப்பதற்கான வசதிகளும் உட்கட்டமைப்பிலும் தங்களிடம் இருப்பதாகவும், இதன் மூலம் ட்ரோன் துறையில் பல மாற்றங்கள் ஏற்படும் என கருடா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷ்யாம் தெரிவித்தார்.”

மேலும் இந்த நிறுவனத்திற்கு, Type Certification மற்றும் RTPO அனுமதியை, டி.ஜி.சி.ஏ எனப்படும் இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் தற்போது வழங்கி உள்ளது. இந்தியாவில், இந்த அனுமதியை பெறும் முதல் ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை, கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

டி.ஜி.சி.ஏ Type Certification சான்றிதழ் என்பது, ட்ரோன்களின் தரத்தை ஆய்வு செய்து, பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின் வழங்கப்படும். இந்த சான்றிதழ், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ட்ரோன் விதிகளின்கீழ் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின்மூலம், அடுத்த 2 ஆண்டுகளில் 1 லட்சம் ட்ரோன் பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், இதனால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன சி.இ.ஓ அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்திடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளதை, எங்கள் ட்ரோன்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்த கிசான் ட்ரோன் திட்டம், விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அடுத்த 5 மாதங்களில், 5000 ட்ரோன்களை தயாரிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளோம். எங்கள் ட்ரோன்கள், விவசாயிகள் மட்டுமல்லாமல் வேளாண் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.  சமீபத்தில், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், ட்ரோன் யாத்திரையை துவக்கி வைத்தார். அப்போது, அடுத்த ஆண்டிற்குள், இந்தியாவுக்கு 1 லட்சம் ட்ரோன்கள் தேவைப்படும் என குறிப்பிட்டார். இந்தியாவின் அந்த இலக்கை அடைய, நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம்.

இந்தியாவின் சாதனைப்படைத்த ட்ரோன் நிறுவனமாக திகழவேண்டும் என்பது எங்கள் எண்ணம் அல்ல, இந்திய மக்கள் 100 கோடி பேரின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாக உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருடா ஏரோஸ்பேஸ் 400 ட்ரோன்கள் கொண்ட ட்ரோன் கடற்படை மற்றும் 26 வெவ்வேறு நகரங்களில் 500 க்கும் மேற்பட்ட விமானிகளைக் கொண்ட நன்கு பயிற்சி பெற்ற குழுவைக் கொண்டுள்ளது. கருடா ஏரோஸ்பேஸ் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டார்ட்அப் என்று அழைக்கப்படுகிறது மற்றும் எதிர்காலத்தில் இந்தியாவின் முதல் ட்ரோன் யூனிகார்ன் ஸ்டார்ட்அப் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.