சீனாவில் இருந்து சேலம் வந்த கொரோனா… ஜவுளி வியாபாரிக்கு பாசிடிவ்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தப்பைக்குட்டை கிராமம் கருப்பக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒருவர், சீனாவில் கடந்த 13 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் கடந்த 27ஆம் தேதி சீனாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டுள்ளார். முதலில் சிங்கப்பூர் வந்து அங்கிருந்து வேறொரு விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.

தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும்
கொரோனா வைரஸ்
பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை விமான நிலையத்தில் ஜவுளி வியாபாரியின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இளம்பிள்ளை ஜவுளி வியாபாரி

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சொந்த ஊரான இளம்பிள்ளைக்கு புறப்பட்டனர். இந்த சூழலில் கோவையில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது. அதில் ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே சேலம் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மகுடஞ்சாவடி சுகாதாரத் துறை அதிகாரிகள் களத்தில் இறங்கினர்.

சேலம் ஆட்சியர் தகவல்

கொரோனா தொற்று பாதித்த ஜவுளி வியாபாரியை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சேலம் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம் அவர்களிடம் கேட்ட போது, கொரோனா வைரஸ் பரிசோதனையில் இளம்பிள்ளையை சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது.

வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்

இதையடுத்து அவரையும், அவரது குடும்பத்தையும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி மருத்துவத்துறை அதிகாரிகள் காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் ஜவுளி வியாபாரி குடும்பத்தினரை கண்காணித்து வருகின்றனர். வெளிநடமாட்டம் இல்லாமல் பார்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா பாதிப்பா?

மேலும் உருமாறிய BF.7 வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் ஜவுளி வியாபாரியின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அடுத்தகட்ட ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிராம சுகாதார செவிலியர் ஒருவர் ஜவுளி வியாபாரியின் வீட்டிலேயே தங்கி அவரின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறார். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

முதலில் மதுரை, தற்போது சேலம்

கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் எஸ்.கார்மேகம் தெரிவித்தார். முன்னதாக சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய், மகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது சீனாவில் இருந்து வந்த 3வது நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.