குவியும் சுற்றுலா பயணிகள்… புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கோலகலாமாக தயாராகும் புதுச்சேரி!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது புதுச்சேரி.

சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. ஆனால் கொரோனா தாக்கத்தால் 2020, 2021 புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரிய அளவில் ஏதும் நடைபெறாமல் போனது. கடந்த ஆண்டு 2021-ல் ஓரளவு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக அதிகளவில் மக்கள் கூடவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா அச்சம் முற்றிலுமாக விலகிய நிலையிலும் புதிய வகை கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கிடையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி தயாராகி வருகிறது.

இதனிடையே டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. மேலும் கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விடப்பட உள்ளதாலும், புதுச்சேரியில் தற்போது குளு, குளுவென குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருவதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளார்கள்.

image
இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஓட்டல்கள், விடுதிகளில் முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நட்சத்திர விடுதி முதல் சாதாரண விடுதி வரை ஆன்லைன் மூலம் வெளிமாநிலத்தினர் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் இந்த மாத இறுதி முதல் அடுத்த மாத முதல் வாரம் வரை அறைகள் இல்லை என பல விடுதிகள் கைவிரித்து வருகின்றன. ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, கேளிக்கை, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

பல்வேறு மைதானம், திடல்கள், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் அனுமதி பெற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் உள்ள புராதான மற்றும் அனைத்து வகை நட்சத்திர விடுதிகள் அனைத்தும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கின்றன. இதேபோல் புதுவையில் பல்வேறு கடற்கரைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

image
இந்நிலையில் புதியவகை கொரோனா தொற்று பரவலையடுத்து, புத்தாண்டு கொண்டாட குறைந்தபட்ச கட்டுப்பாடுகளை புதுச்சேரி அரசு விதித்துள்ளது. அதன்படி டிச 31ஆம் தேதி இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிந்தபடிதான் வரவேண்டும் என்பன உள்ளிட்ட  கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளதால் அதை முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என கண்காணிக்க காவல்துறை தயார் நிலையில் உள்ளது என ஐ.ஜி சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லாத நிலையில் புதுச்சேரியில் மட்டும் புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனாலேயே புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால் இவ்வருடன் கூடுதல் முன்னேற்பாடு புதுவை அரசு உள்ளது. மற்றொரு பக்கம் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி முழுவதும் குவிந்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி களைகட்டியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.