புதிய கொரோனா: 4ஆவது டோஸ் தடுப்பூசி போடணுமா?

கொரோனா வைரஸ்
பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அரசாங்கங்கள் இலவசமாக கொரோனா தடுப்பூசியை தங்களது நாட்டு மக்களுக்கு வழங்கின. இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி, தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 220.08 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இதில் 95.13 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.39 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். தடுப்பூசி போடத் துவங்கியது முதல் 12 வயதுக்கு மேற்பட்ட 94.59 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 87.71 சதவீதம் பேர் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 27 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, சீனாவில் அதிவேகமாக பரவி வரும் பிஎப்7 (BF.7) வகை கொரோனா மாறுபாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கொரோனா மாறுபாடு தடுப்பூசியின் நிலையைப் பொருட்படுத்தாமல் வேகமாக பரவி வருவதாகவும், இதன் வீச்சு அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை பிஎப்7 ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று மொத்தம் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.

இந்நிலையில், 2ஆவது டோஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், தற்போதைக்கு அது தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு 4ஆவது டோஸ் அதாவது பூஸ்டர் இரண்டாவது டோஸ் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீன மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்தான் அங்கு கொரோனா வைரஸ் கடுமையாக பரவி வருவதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் இந்திய மக்கள் கொரோனா வைரஸின் பல வகைகளில் ஏற்கனவே தப்பிப் பிழைத்துள்ளதால், இயற்கையாகவே வைரஸை எதிர்க்கும் சக்தி அவர்களிடம் உருவாகியுள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம், முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் பரவலில் அலட்சியம் காட்டக் கூடாது எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.