'ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறுக' – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாபெரும் பேரணி

“தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்ற டி.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

“தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், தமிழக மக்கள், தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக செயல்படும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும்” என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தினர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இந்த பேரணியை தொடங்கி வைக்க, தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமையில் பேரணி நடந்தது. மாநில செயலாளர் முத்தரசன் சட்டமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சைதாப்பேட்டை குயவர் வீதியில் தொடங்கிய பேரணி ஆளுநர் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்த இப்பேரணி சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே சென்றபோது, பேரணியில் கலந்துக்கொண்டோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது காவல்துறைக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் டி. ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுப்புராயன், செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, தளி ராமசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்

image
முன்னதாக மேடையில் பேசிய டி.ராஜா, ”பல மொழிகள், கலாச்சாரம் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியா, கூட்டாட்சி அடிப்படையில் செயல்படுகிறது. ஒற்றை பரிணாம ஆட்சியாக இது இருக்க வேண்டும் என பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. பன்முகத் தன்மைக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக ஆளுநர் சனாதன நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் ஆளுநர் மூலம் சில செயல்களை செய்ய விரும்புகின்றனர். தமிழக ஆளுநர் சனாதன நடவடிக்கை குறித்து பேசுகிறார். இந்தியாவில் அரசியல் சட்டம் காப்பாற்றப்பட  வேண்டும். ஆளுநர் பதவி தேவையற்றது என வலியுறுத்துகிறோம்.

அதனால் தான் தமிழக முதல்வர் பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என பேசி இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவாக பாஜக செயல்படுகிறது.  2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக்கு எந்த வெற்றியும் கிடைக்காது.  தமிழக மக்களை காக்கவும், ஜனநாயகத்தை காக்கவும் போராட்டம் அவசியம். அத்தகைய போராடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியப் பங்கு வகிக்கும்” என்றார்.

பல்வேறு மாவட்டத்தில் வந்திருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை காவல்துறை கைது செய்தனர். பேரணி காரணமாக சைதாப்பேட்டை பகுதியில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.