டெல்லி: நாட்டிலேயே 2021-ம் ஆண்டு தமிழகத்தில் தான் அதிகமான விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை அளித்துள்ளது. நாடுமுழுவதும் 2021-ம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 1,53,972 பேர் உயிரிழந்துள்ளனர் என ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகியுள்ளன எனவும், உயிரிழப்பில் உத்திரப்பிரதேசத்துக்கு அடுத்த இடத்தில் உள்ள தமிழகத்தில் 15,384 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் கார் விபத்தில் உயிரிழந்த 19,811பேரில் 83% பேர் (14,397) சீட்பெல்ட் அணியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ள 69,385 பேரில் 67% பேர் (47,000) தலைக்கவசம் அணியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 6,445 பேரும், தமிழ்நாட்டில் 5,888 பேரும் மகாராஷ்டிராவில் 4,966 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.