தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதனால் குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதற்கிடையே, பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை என்பதால் குற்றாலத்திற்கு அதிகபடியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று பழைய குற்றாலம் அருவியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீராடிக் கொண்டிருந்தனர். அவர்களில் பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் நீராடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கிருஷ்ணனின் குழந்தை ஹரிணி அருவியின் தண்ணீர் வெளியேறும் இடத்தில் உள்ள துவாரத்தின் வழியாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாள்.
இதைப்பார்த்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த இளைஞர் ஒருவர் துணிச்சலாக குழந்தை அடித்து செல்லப்பட்ட இடத்திற்கு துணிச்சலாக சென்றார்.
அங்கு அந்த சிறுமி ஒரு பாறையை பிடித்துக் கொண்டு நிநின்றுகொண்டிருந்தார். இதைப்பார்த்த அந்த இளைஞர் அந்த பாறையின் அருகே சென்று குழந்தையை மீட்டு வந்தார்.
அதன் பின்னர், அந்த குழந்தையின் தாய் குழந்தையை கட்டி அணைத்து கதறி அழுதாள். இதையடுத்து அவர்கள் அந்த குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.