கடையம்: ஆழ்வார்குறிச்சியில் பஸ் நிறுத்தங்கள் மாற்றப்பட்டதை கண்டித்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ெபாதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டன.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் தென்காசி- அம்பை மெயின் ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே பஸ் நிறுத்தங்கள் வழியாக பஸ் ஏறி சென்று வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணா சிலை அருகே பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் ஒருவர் உயிரிழந்தார். இதனை அடுத்து பஸ் நிறுத்தங்களை சமுதாய நலக்கூடம் மற்றும் தெப்பக்குளம் அருகில் மாற்றி மாவட்டம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.
இதனை கண்டித்தும் மீண்டும் அண்ணா சிலை அருகே பஸ் நிறுத்தங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆழ்வார்குறிச்சியில் இன்று (வியாழன்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதையொட்டி ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. மருந்து மற்றும் பால் விற்பனை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.