சென்னை: இறை நம்பிக்கை, சமூக நலன், அர்ப்பணிப்பு உணர்வுள்ளவர்களை கோயில் அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்று மாவட்ட குழுக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, திருச்சி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களைச்சேர்ந்த மாவட்டக் குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள 10 மாவட்டங்களில் சட்டப்பிரிவுகளின்படி, பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களை நியமனம் செய்யக் கூடிய கடமை உங்களுக்கு உள்ளது. அவ்வாறு நியமனம் செய்யும்போது சட்டவிதிகளுக்கு உட்பட்டும், இறை நம்பிக்கை, சமூக நலன் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிறவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தப் பணிகளில் உதவி ஆணையர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள்.
ஆகவே, தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோயில்களுக்கான அறங்காவலர்கள் நியமனம் குறித்து விளம்பரம் செய்து, தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
மேலும், தங்கள் மாவட்டத்திலுள்ள கோயில்களில் மேற்கொள்ளவேண்டிய திருப்பணிகள் மற்றும், புகார் ஏதேனும் இருப்பின் அதுகுறித்து துறையின் கவனத்துக்கு கொண்டு வந்து சரி செய்திட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.