சென்னை: கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2022-ம் ஆண்டிலிருந்து சிறப்பாக செயல்புரிந்த 37 கிராம ஊராட்சிகளை மாவட்டத்துக்கு ஒன்று வீதம் தேர்வு செய்து “உத்தமர் காந்தி விருது” வழங்க ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இவ்விருதுக்கு அனைத்து கிராம ஊராட்சிகளும் விண்ணப்பிக்கலாம்.
கிராம ஊராட்சிகள் மிக எளிய முறையில், இணையதளத்தின் வழி படிவங்களில் உள்ள பதிவுகளை உள்ளீடு செய்து விருதுக்கான போட்டியில் பங்கேற்கலாம். கிராம ஊராட்சிகள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு https://tnrd.tn.gov.in/ இணையதள முகவரியை பயன்படுத்த பயனர் மற்றும் கடவுச் சொற்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள், இதுதொடர்பாக கிராம ஊராட்சி நிர்வாகங்களுக்கு உரிய பயிற்சியை டிச. 31-க்குள் (நாளை) அளிக்க வேண்டும்.
இவ்விருதுக்கு போட்டியிடும் கிராம ஊராட்சிகள் மதிப்பெண்கள் மூலம் பட்டியலிடப்பட்டு மாவட்டத்துக்கு 5 சிறந்த கிராம ஊராட்சிகள் வீதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநகரத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர்களால் முன்மொழியப்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 37 சிறந்த கிராம ஊராட்சிகள் மாநில அளவில் இறுதி செய்யப்படும். அரசால் இறுதி செய்யப்பட்ட 37 கிராம ஊராட்சிகளுக்கு முதல்வரால், கேடயம், பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இவ்விருதுக்கான இணையதள பதிவுகளை வரும் ஜன.17-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும். இ்வ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.