சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக ஜனவரி 31ம் தேதி கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த ஆண்டு ஆக. 24 அறிவித்தார். மேலும் கருணாநிதிக்கு அமைக்கப்படவுள்ள நினைவிடத்தின் மாதிரி வரைபடத்தை முதல்வர் ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்று இருந்து.
இந்த நினைவுச் சின்னம் கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்றடையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290 மீ தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீ தூரத்திற்கும் என 650 மீட்டர் தொலைவிற்கு கடலில் பாலம் அமைக்கப்படவுள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் கடலுக்குள் 42 மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்தது. மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது.
இதன்பிறகு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத்துறை தமிழக பொதுப்பணி துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இந்த திட்டத்திற்கு சுற்றச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், இடர்பாடுகள் மதிப்பீட்டு அறிக்கை, பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவற்றை தயார் செய்து அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
இதன்படி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக வரும் ஜனவரி 31ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.