திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கைபேசி பாதுகாப்பு பெட்டகம்; அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.!

திருச்செந்தூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, பக்தர்களுக்கு  தேவையான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று (30.12.2022) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகைதந்து அங்கு பெருந்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்ததோடு பக்தர்களின் கைபேசிகளை பாதுகாத்து வழங்கிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு பெட்டகத்தினை திறந்து வைத்தார்.

திருக்கோயிலின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் வகையில் திருக்கோயிலுக்குள் பக்தர்கள் கைபேசியை கொண்டு செல்ல தடைவிதித்தும்,  திருக்கோயில் வளாகத்தில் கைபேசிகளை பாதுகாத்து,  மீள பக்தர்களுக்கு ஒப்படைக்கும் நடைமுறைகளை அனைத்து திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்திடவும்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில்  “பக்தர்கள் கைபேசிகளை திருக்கோயிலுக்குள் கொண்டு வர அனுமதி இல்லை.  மீறி கொண்டு செல்லப்படுவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்.

கைபேசி திரும்பி வழங்கப்பட மாட்டாது” என்ற வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை திருக்கோயிலின் நுழைவு  வாயில்களில் பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம் வைத்திடவும், திருக்கோயிலுக்குள் கைபேசி கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது என்கிற விபரத்தினை ஒலிப்பெருக்கி  மூலம் தினசரி ஒலிபரப்பு செய்திடவும்,  பக்தர்கள் கொண்டு வரும் கைபேசிகளை திருக்கோயில் வளாகத்திற்குள் பெற்று பாதுகாத்து வைத்திட ஏதுவாக பாதுகாப்பு பெட்டக வசதி அமைத்திடவும், கைபேசிகளை பெற்று திரும்ப வழங்கிடும் பணியினை செய்ய ஏதுவாக தேவையான எண்ணிக்கையில் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுத்திடவும்.

பக்தர்கள் கைபேசிகளைப் பெற்று அதற்கு அத்தாட்சியாக டோக்கன் வழங்கும் முறை அமல்படுத்தவும், அதற்கு பாதுகாப்புக் கட்டணமாக ஒரு கைபேசிக்கு ரூ. 5/- தொகையினை வசூலிக்கவும், கைபேசிகள் பக்தர்களிடம் மீள வழங்கப்படும் போது டோக்கன் மற்றும் பக்தரின் அடையாளம் உறுதி செய்து வழங்கிட வேண்டுமெனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் கைபேசிகளை பாதுகாத்து வழங்கிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு பெட்டகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.